அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 12
1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;
2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.
3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது.
4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.
5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்படிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.
6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு. இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
8 தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
9 அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.
11 பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.
12 அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள்.
14 அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள்.
15 அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள்.
16 பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள்.
17 அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப்போனான்.
18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக் குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.
19 ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெயύது, அவர்களைக் கொலைசெய்யும்ʠΟி கட்டளையிட்டு, பின்பு யூதேயா தேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான்.
20 அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர் பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரனைக்காரனாகிய பிலாத்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள்,
21 குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.
22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.
25 பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 13
1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லுூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள்.
2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனை செய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியினவர் திருவுளம்பற்றினார்.
3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள்.
4 அப்படியே அவர்கள் பரிசுத்த ஆவியினால் அனுப்பப்பட்டுச் செலுக்கியா பட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள்.
5 சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெப ஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான்.
6 அவர்கள் பாப்போ பட்டணம் வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள்.
7 அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான்.
8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான்.
9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து:
10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மயான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ?
11 இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சில காலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான்.
12 அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான்.
13 பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான்.
14 அவர்கள் பெர்கே பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள்.
15 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
16 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள்.
17 இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி,
18 நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து,
19 கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து,
20 பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.
21 அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜாவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார்.
22 பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.
23 அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார்.
24 இவர் வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்.
25 யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான்.
26 சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்துநடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.
28 மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.
29 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.
31 தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களோ ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள்.
32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே,
33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.
34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார்.
35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது.
36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன்பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.
37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை.
38 ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும்,
39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது.
40 அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே:
41 அசட்டைகாரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான்.
42 அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.
43 ஜெபஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.
44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.
45 யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள்.
46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக்கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
47 நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.
48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள்.
49 கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று.
50 யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள்.
51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள்.
52 சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் – அதிகாரம் 14
1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள்.
2 விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்க்ள்.
3 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
4 பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள்.
5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில்,
6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்;
7 அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள்.
8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து,
9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு:
10 நீ எழுந்து காலுூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான்.
11 பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,
12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.
13 அல்லாமலும் பட்டணத்துக்குமுன்னே இருந்த யூப்பித்தருடையகோவில் பூஜாசாரி எருதுகளையும் மாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, பட்டணத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்
15 மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போலப்பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
16 சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்க விட்டிருந்தும்,
17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள்.
18 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது.
19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள்வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டுபோனார்கள்.
20 சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான்.
21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பி வந்து,
22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள்.
23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்திவைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
24 பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து,
25 பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தாலியா பட்டணத்திற்குப் போனார்கள்.
26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காக தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள்.
27 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து,
28 அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.