லூக்கா – அதிகாரம் 18
1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான்.
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில்போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்னினாள்.
4 வெகுநாள் வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன் நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும்,
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டுமென்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வாரென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11 பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்திவருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
15 பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக்கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
16 இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகளை என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது;
17 எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
20 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.
21 அதற்கு அவன் இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
23 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது.
25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.
26 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
27 அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதாரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்டவன் எவனும்,
30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31 பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
32 எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
33 அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்.
34 இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35 பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சைகேட்டுக்கொண்டிருந்தான்.
36 ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
37 நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன் இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
38 முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான்.
39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
40 அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி:
41 நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
42 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
43 உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
லூக்கா – அதிகாரம் 19
1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில்,
2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன்,
3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல்,
4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான்.
5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்துபார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார்.
6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டு போனான்.
7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படிபோனார் என்று முறுமுறுத்தார்கள்.
8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்.
9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே.
10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்.
11 அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்:
12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பி வரும்படி தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்.
13 புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான்.
14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான்.
16 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
17 எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
18 அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான்.
19 அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான்.
20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன்.
21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான்.
22 அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே,
23 பின்னே ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி;
24 சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான்.
25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள்.
26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்
28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார்.
29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி:
30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்.
31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார்.
32 அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள்.
33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி,
35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள்.
36 அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்.
37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு,
38 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள்.
39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள்.
40 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,
42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது.
43 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி,
44 உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்.
45 பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
46 என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார்.
47 அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும்,
48 ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக் கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.
லூக்கா – அதிகாரம் 20
1 அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து:
2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள்.
4 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார்.
5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார்.
6 மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி:
7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள்.
8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
9 பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத் தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான்.
10 அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
11 பின்பு அவன் வேறோரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள்.
12 அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள்.
13 அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான்.
14 தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு,
15 அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்ன செய்வான்?
16 அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள்.
17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன?
18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார்.
19 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப்பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள்.
20 அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
21 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம்.
22 இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
23 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
24 ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள்
25 அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
26 அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள்.
27 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து:
28 போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே.
29 சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
30 பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான்.
31 மூன்றாஞ்சகோதானும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள்.
32 எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள்.
33 இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள்.
34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
35 மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
36 அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
37 அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில். கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார்.
38 அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார், எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார்.
39 அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள்.
40 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
41 அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்?
42 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று,
43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே.
44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
45 பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி:
46 நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி,
47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.
லூக்கா – அதிகாரம் 21
1 அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார்.
2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு:
3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.
5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக் குறித்துச் சிலர் சொன்னபோது,
6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார்.
7 அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள்.
8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள்.
9 யுத்தங்களையும் கலகங்களையுங் குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார்.
10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளை நோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும்.
12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
13 ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும்.
14 ஆகையால் என்ன உத்தரவுசொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள்.
15 உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன்.
16 பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள்.
17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்.
18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது.
19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள்.
22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே.
23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும்.
24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.
25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்.
26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.
27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.
28 இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார்.
29 அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள்.
30 அவைகள் தளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள்.
31 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
32 இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை.
34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.
36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
37 அவர் பகற்காலங்களில் தேவாயத்திலே உபதேசம்பண்ணிக் கொண்டிருந்து இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.
38 ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.