சங்கீதம் – அதிகாரம் 85
1 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர்.
2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர்.(சேலா.)
3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர்.
4 எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும்.
5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ?
6 உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?
7 கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும்.
8 கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக.
9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது.
10 கிருபையும் சத்தியமும் ஒன்றயொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும்.
12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.
சங்கீதம் – அதிகாரம் 86
1 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன்.
2 என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3 ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக்கூப்பிடுகிறேன்.
4 உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.
6 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும்.
7 நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8 ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.
9 ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.
10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12 என் தேவனாகிய ஆண்டவரே, உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14 தேவனே அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள். கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள்.
15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும் இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி உமது அடியாளின் குமாரனை இரட்சியும்.
17 கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தை காண்பித்தருளும்.
சங்கீதம் – அதிகாரம் 87
1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது.
2 கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார்.
3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.)
4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ பெலிஸ்தியரிலும் தீரியரிலும், எத்தியோப்பியரிலுங் கூட, இன்னான் அங்கே பிறந்தானென்றும்;
5 சீயோனைக்குறித்து இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார்.
6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.)
7 எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.

