சங்கீதம் – அதிகாரம் 70
1 தேவனே, என்னை விடுவியும் கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
2 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக.
3 ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக.
4 உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
5 நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
சங்கீதம் – அதிகாரம் 71
1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கமடையாதபடி செய்யும்.
2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும்.
3 நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர்.
4 என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும்.
5 கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயது தொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர்.
6 நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.
7 அநேகருக்கு நான் ஒரு புதுமை போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர்.
8 என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக.
9 முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
10 என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:
11 தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்து பிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள்.
12 தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
13 என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள்.
14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன்.
15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன்.
16 கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன்.
17 தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.
18 இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.
19 தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்?
20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.
21 என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்.
22 என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன்.
23 நான் பாடும்போது என் உதடும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும்.
24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.
சங்கீதம் – அதிகாரம் 72
1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும் ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும்.
2 அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடுΠύ விசாரிப்பார்.
3 பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும்.
4 ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார்.
5 சூரியனும் சந்திரனும் உள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள்.
6 புல்லறுப்புண்ட வெளியின் மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார்.
7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.
8 சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.
9 வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.
10 தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள்.
11 சகல ராஜாக்களும் அவரைப்பணிந்து கொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.
12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்.
13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார்.
14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.
15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார்.
16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
17 அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.
18 இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.
19 அவருடைய மகிமை பொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென்.
20 ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.