ஜூன் 21
ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று?’
மாற்கு 4:40
எங்கே விசுவாசம் கொஞ்சமோ, அங்கே பயங்கள் அதிகம் சீஷர்கள் கலக்கத்தால் நிறைத்திருந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: உங்களுக்கு ஏன் விசுவாசமில்லை என்று கேட்கிறார். நம்முடைய பரமபிதா நம்மையும் பார்த்து, அடிக்கடி இப்படிக் கேட்க நியாயமில்லையா? நீங்கள் ஏன் என்னுடைய வார்த்தையை நம்புகிறதில்லை? என்னோடு உங்களுக்கு இருக்கும் சம்பந்தத்தையும், என் நடக்கையையும், என் உண்மையையும், நீங்கள் அவைகளின்மேல் நம்பி ஏன் சார்ந்திருக்கிறதில்லை? என்னுடைய சமுகம், வல்லமை, அன்பு இவைகளை ஏன் நீங்கள் நம்புகிறதில்லை? நான் உதவிசெய்வேன் என்று நீங்கள் எதிர்பார்த்து, நான் தருவேனென்று நீங்கள் ஏன் எதிர்நோக்குகிறதில்லை? தெளிவும் உண்மையும் நிச்சயமுமான வாக்குத்தத்தங்களை நான் உங்களுக்குச் செய்யவில்லையா? பின்னும் பின்னும் அந்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவில்லையா என் வார்த்தை உண்மையுள்ளதென்று காட்ட, நான் சாட்சிகளைக் கொடுக்கவில்லையா? என் பரிசுத்த ஆவியை நான் கொடுப்பேனென்று சொல்லவில்லையா? என் பரிசுத்தத்தை உங்களுக்காக ஈடுவைக்கவில்லையா? உங்களுக்கென்றும், உங்களுக்காகவும் என் குமாரனைக் கொடுக்கவில்லையா? உங்களுக்குத் துன்பம் வந்தபோதெல்லாம் நான் உங்களுக்காக வெளிப்படவில்லையா? பின்னை ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்று அவர் கேட்கிறார். சிநேகிதரே! தேவனுக்கு முன்பாக நம்மைத் தாழ்த்துவோமாக. அவிசுவாசத்திற்கு இடங்கொடுத்த குற்றத்தை அறிக்கையிட்டு, விசுவாசத்திற்காக கெஞ்சுவோமாக. எந்த இடத்திலும், எந்தக் காரியத்திலும், தேவனையே நோக்கிக்கொண்டிருப்போமாக, அவர் தடம் தெரியாவிட்டாலும், அவரையே நம்புவோமாக.
என் ஆத்மா முறையிட்டு
மனம் கலங்குவானேன்?
பிதாவின் கைக்கீழ்ப்பட்டு
நம்பினால் மலைவானேன்?
ரட்சிப்பைக் காணச்செய்யும்
க்ருபை என்னில் பொழியும்.