ஜூன் 19
‘அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்‘
உபாகமம் 33:3
ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தவான்தான். தேவநோக்கத்தால் பிரித்துவைக்கப்பட்டவன், பரிசுத்த ஆவியால் சுத்திகரிக்கப்பட்டவன். தேவனுக்கென்றும் அவர் ஊழியத்திற்கென்றும் பிரித்தெடுக்கப்பட்டவன். ஒவ்வொரு பரிசுத்தவானும் இயேசுவின் கரத்திலிருக்கிறான்; அவர் இரக்கமென்னுங் கரத்தில், அவர் வல்லமை என்னுங் கரத்தில் திவ்விய செயலென்னுங் கரத்திலிருக்கிறான். சகலரையும் தாங்க இயேசுவின் கரம் போதுமானது; சகலரையும் காக்க அது பெலனுள்ளது; அவருடைய ஆஸ்தியாக, அவருடைய ரத்தத்தால் கொள்ளப்பட்ட பொருளாக அவருடைய கரத்திலிருக்கிறார்கள். அவருடைய பிதாவால் அவருக்கு ஒப்புவிக்கப்பட்ட பொக்கிஷமாக அவருடைய கரத்திலிருக்கிறார்கள். தம்முடைய பார்வைக்குப் பிரியமானபடி அவர்களை அவர் நடத்தலாம். சாத்தான், மரணம், நரகம் இவைகளினின்று தற்காக்கப்பட, உலகமாகிய இந்த வனாந்தரத்தின் வழியாய் நம்முடைய பிதாவின் வீட்டுக்கு நடத்தப்பட அவருடைய கரத்திலிருக்கிறார்கள். அவருடைய திறமையின்படி உருவாக்கப்பட்டு, அவருடைய அன்பான சாயலுக்கு ஒப்பாக்கப்பட்டு, புசலுக்குத் தப்பி பெருங்காற்றினின்று விடுவிக்கப்படும்படி அவர் கரத்திலிருக்கிறார்கள். அவருடைய துதியின் பிரஸ்தாபத்திற்கென்று பிரயோகிக்கப்பட்டு அவருடைய நித்திய சிம்மாசனத்தண்டைக்கு உயர்த்தப்பட அவருடைய கரத்திலிருக்கிறார்கள். அவர்கள் அவருடைய பரிசுத்தவான்கள் அவர்களைத் தம்முடைய மனையாட்டியாகத் தெரிந்துகொண்டார். சத்துருவின் கையினின்று மீட்டார். தம்முடைய சொந்தப் பொருளாகப் பாவிக்கிறார். அவர்களை இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தார். அவர்களை என்றும் மகிமைப்படுத்துவார்.
தேவபக்தர் பாக்கியர்
இயேசுவால் கொள்ளப்பட்டோர்,
தேவன் அவர் சகாயர்
சா வென்று மீட்கப்பட்டோர்,
அவரோடு நமக்கும்
நித்திய பாக்யம் கிடைக்கும்.