ஜூன் 16
‘ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்போகிறேன்‘
யோவான் 14:2
சிநேகிதனே! இயேசு உனக்காக என்ன செய்கிறார் பார். அவர் உன் காரியமாய்த்தான் போயிருக்கிறார். பூமியில் அவர் நமக்குச் செய்யவேண்டியதெல்லாம் செய்தார். பின்னும் தம்முடைய கிரியையை நடத்தப் பரமேறிப்போனார். அவர் ஆயத்தம்பண்ணுமிடம் அவருக்கு ஏற்றதாயிருக்கும். அவர் இளைப்பாறுதல் மகிமையாயிருக்கும். அது நமக்கும் ஏற்றதாயிருக்கும். அங்கே துன்மார்க்கர் நமக்குத் தொந்தரவு செய்வதில்லை, பாவம் நம்மை அலைக்கழிக்கமாட்டாது, துன்பங்கள் நம்மை அங்கே சூழ்ந்துகொள்ளாது. ஆயாசம் அடைந்தவர்கள் அங்கேதான் இளைப்பாறுவார்கள். ஸ்தலத்தை நமக்கு ஆயத்தம்பண்ணுகிறாரா? நம்மையும் அதற்கு ஆயத்தம்பண்ணுகிறார். அதற்காகத் தான் துன்பங்களை அனுப்பி நம்மைச் சோதிக்கிறார். அதிசீக்கிரத்தில் நீங்கும் லேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. இயேசு நம்முடைய விஷயமாகவே கிரியை செய்கிறார் என்று நித்தம் நினைப்போமாக. அவர் நமக்கு ஆயத்தம்பண்ணுகிற இடத்தை மரணம் நமக்கு சொந்தமாக்குகிறதாகப் பாவிப்போமாக. எந்தச் சோதனையால் நாம் சோர்வடைந்து மயங்கினாலும், அவர் எங்கே இருக்கிறாரோ அங்கே நாமும் இருக்கும்படிக்கு அவர் மறுபடியும் வந்து நம்மைத் தம்மண்டை சேர்த்துக்கொள்ளுவாரென்று ஞாபகத்தில் வைத்துக்கொள்வோமாக. இப்போது நாம் வாசம்பண்ணுகிற குடிசை அசவுக்கியமாயிருக்கலாம், வசதியற்றதாயிருக்கலாம். நமக்குக் கிடைக்கப்போகிற மாளிகையோ விஸ்தாரமானது, அலங்காரமானது, தேவனுக்குப் பாத்திரமானது.ஜெயங்கொள்ளுகிறவன் சகலத்தையும் சுதந்தரித்துக்கொள்ளுவான். ஏகோவா அவனுக்குத் தேவன். எவ்வளவு பெரியசிலாக்கியம்! சொல்லமுடியாத மகிமை! இனிமையான காட்சி!
ஓர் ஸ்தலமெனக்காயத்தம்
பண்ண நீர் வானில் சென்றீரோ?
நான் உம்மோடு சேர்ந்து நித்தம்
உட்காரென்றுதான் சொல்வீரோ
லோகம் வாழ்த்தியும் தாழ்த்தியும்
உம்மைப் பார்க்க வரம் ஈயும்.