ஜூன் 15
‘உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக‘
யோவான் 14:1
நாம் கலங்கி வருத்தப்பட்டு, ஆறுதலற்றிருக்கிறது இயேசுவுக்குப் பிரியமல்ல. நீ உறுதியும், பரிசுத்தமும், பாக்யசாலியுமாயிருக்க விரும்புகிறார். நீ பயப்படவேண்டாமென்கிறார். விசுவாசமாயிருவென்று கற்பிக்கிறார். அவர் உனக்காக ஏற்பட்டு, உன் காரியங்களில் முயற்சியாயிருக்கிறபடியால், உன்னை அடுத்ததையெல்லாம் நீ அவருக்கு ஒப்புக்கொடுத்துப் போடுவது நியாயம், இப்படி நாம் செய்வதற்கு வகையென்ன? உடன்படிக்கையில் உன் தேவனானவர் உன் காரியங்களில் கவலைகொள்ளுகிறவரென்று உன் மனதில் நிச்சயமாய் எண்ணிக்கொள். தேவன் என்னோடு இருக்கிறார் என்கிற எண்ணத்தோடு ஜீவனம்பண்ணு. எனக்குள்ளும், என்னைச் சூழவும், நடக்கிற சகலத்தையும், அவர் நன்றாய்க் கவனிக்கிறார். எனக்கு நன்மைசெய்யச் சமயம் எப்போது வாய்க்குமென்று காத்திருக்கிறார். எதுவும் என்னைச் சேதப்படுத்த ஓட்டார், என்னில் தம்மை மகிமைப்படுத்துவார், தம்மில் என்னை மகிமைப்படுத்துவார். தம்மை நம்பச் சொல்லுகிறார். நான் நம்பி பயமற்றிருப்பேன், அப்போது நடக்கிறதென்ன? அவர்பேரில் சார்ந்திருக்கிறவர்களைப் பரிபூரண சமாதானத்தில் தற்காப்பார். ஏனெனில் அவரில் நம்பியிருக்கிறார்கள். என்றைக்கும் கர்த்தரை நம்பு, கர்த்தராகிய ஏகோவாவில் நித்திய பெலனுண்டு. ஒன்றினாலும் வருத்தப்படாதே, உன் ஆத்துமா இயேசுவின் கையிலிருக்கிறது. உன் ஜீவன் தேவனில் கிறிஸ்துவோடு மறைந்திருக்கிறது. உன் காலங்கள் அவர் கையிலிருக்கிறது. சகலமும் உன் நன்மைக்கென்றே கிரியை செய்கிறது.
என் ஆவி தியங்கும்போது
அவிசுவாசம் அகற்றும்.
என்னில் துக்கம் உண்டாகும்போது
நற்சமாதானத்தை ஊற்றும்;
உம்மை நான் காணுமட்டுக்கும்
என் ஆவியும்மில் தரிக்கும்.