ஜூன் 14
‘உன் நாட்களுக்குத்தக்கதாக உன் பெலனும் இருக்கும்‘
உபாகமம் 33:25
தனக்கு நேரிடப்போகிற தின்னதென்று ஒருவனும் அறியான், தேவன் அறிவார். அவனவனுடைய சோதனைக்குத்தக்கதாக பெலன் அளிப்போமென்கிறார். நாம் வீணாய்க் கலங்கவேண்டியதில்லை; சோதனையோடு அதைச் சகிக்கத்தக்க பெலனும் வரும். துன்பங்களும் தேவன் அனுப்புகிற இரக்கந்தான். தேவ ஆசீர்வாதம் இல்லாவிட்டால் உலக வாழ்வும் சாபமாய் முடியும், அதோடு பலத்த பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. தேவன் நமக்கு எப்பொழுதும் உண்மையுள்ளவராய்த்தானிருக்கிறார். நம்முடைய நாளுக்குத்தக்கதாய் பெலனைத் தந்துவந்தார். நாம் இப்போது ஏன் சந்தேகிக்கவேண்டும்? மிகவும் கொடிதான வருத்தங்கள் நேரிடுகிறதாயிருந்தாலும் நான் நம்புவேன், பயப்படமாட்டேன். ஏகோவாவாகிய கர்த்தர் என் பெலனும் என் பாட்டுமாயிருக்கிறார். அவர் என் ரட்சிப்புமானார் என்றும் நன்றாய்ச் சொல்லலாம். நாம் வரவரப் பெலத்துப்போகிறோம். எந்த விசுவாசியும் சீயோனில் தேவனுக்கு முன்பாகக் காணப்படுவான்; நமக்கானவைகளை அவர் பூரணப்படுத்துவார். தம்முடைய கரத்தின் கிரியையைக் கைவிடமாட்டார். நமக்கு வேண்டியபோது வேண்டியமட்டாக வேண்டியதெல்லாம் அவர் கொடுப்பாரென்று இருப்போமாக. நம்முடைய சுமைக்குத்தக்கதாக, நம்முடைய நாளுக்குத்தக்கதாக நம்முடைய பெலனுமிருக்குமென்று நம்புவோமாக. அவருடைய வாக்குத்தத்தம் தெளிவாயிருக்கிறது. அதில் சந்தேகமில்லை. அது நிச்சயம், நம்முடைய தேவனும் உண்மையுள்ளவர்.
அவசியமானபோது
அவர் கை உன்னை விடாது,
நீ பெலவீனனானாலும்
ரட்சிப்பார் எவ்விதத்திலும்.