ஜூன் 13
‘கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்‘
சகரியா 3:5
சாத்தான் யோசுவாவின்மேல் குற்றஞ்சாட்டி, அவனை எதிர்த்தபோது, அவன் அருகில் நின்றதார்? அவனுடைய அழுக்கான வஸ்திரங்கள் அவனுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லி, அவன் தேவனுக்கு முன்பாக வாவழைக்கப்பட்டபோது, அவன் அருகில் நின்றதார்? இயேசுதான் நின்றார். அவர் உடன்படிக்கையின் தூதன், மனிதனல்ல. தேவன் ஏற்படுத்தின சரியான ஆசரிப்புகூடாரத்தில் பணிவிடை செய்கிறவர். ஏகோவாவின் சமுகத்தில் நிற்கும் தூதன். அவர்தான் தம்முடைய ஜனங்கள் சமீபத்திலிருக்கிறவர். நம்முடைய சமீபத்தில் நிற்கிறவர். ஜெபம் பண்ணும்போது, துன்பம்வரும்போது, சோதிக்கப்படும்போது, அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தப் பிரயாசப்படும்போது நம்முடைய சமீபத்தில் நிற்கிறார். தேவனுடைய சித்தத்தை நமக்குப் போதிக்க, தேவ காரியங்களில் நமக்கு உதவிசெய்ய, தேவ சம்பத்தால் நம்மை ஐசுவரியவான்களாக்க, நமக்கு நன்மை உண்டாகும்படி பாதுகாக்க நம்முடைய சமீபத்தில் நிற்கிறார். சிநேகிதரே, யார் நம்மைவிட்டுப் போனாலும், இயேசு நமக்குச் சமீபமாயிருக்கிறார். நாம் எப்பொழுதும் நம்முடைய கண்ணை அவர்பேரில் வைக்கவேண்டும். நாம் செய்வது ஒவ்வொன்றையும் ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் மறக்கக்கூடாது. இயேசு கவனித்துக்கொண்டேயிருக்கிறார். ஆதலால் நாம் பயபக்தியாயிருக்கவேண்டும், நன்றியறிந்தவர்களாயிருக்கவேண்டும், தைரியஸ்தரா யிருக்கவேண்டும், ஏழையின் ஆத்துமாவை ஆக்கினைக்குள்படுத்தப் பார்க்கிறவர்களினின்று விடுவிக்க அவர் சமீபத்தில் இருக்கிறார். உதவிசெய்ய ஆயத்தமாய், கொடுக்க மன உற்சாகமாய் ஆசீர்வதிக்கத் தீர்மானித்தவராய் நிற்கிறார். இயேசு எப்பொழுதும் சமீபத்தில் இருக்கிறாரென்று எண்ணி, நமக்கு வேண்டிய உதவியையும் ஆலோசனையையும் தருவார் என்று எப்பொழுதும் அவரை நோக்குவோமாக.
ஆவியே கண்ணுயர்த்திப்பார்
உன் மீட்பரங்கே நிற்கிறார்,
மகத்துவத்தின் உன் வக்கீல்
நற்றூபமேந்தி நிற்கையில்,
அவர்மேல் உன் பாரம் வைத்து
தேடு அவரை சந்தோஷித்து.