ஜூன் 12
‘தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்‘
சங்கீதம் 84:11
வெளிச்சம், ஆறுதல், செழிப்பு இவைகளெல்லாம் அவரிடத்திலிருந்து வரவேண்டும். அவர் நமக்கு வெளிச்சமும் ரட்சிப்புமானவர்; அவர் நம்மைத் திக்கற்றவர்களாகவிடார். அவரால்தான் நாம் கனிகொடுக்கலாம். அவரைஅறிந்து விசுவாசித்து அவரோடு நடக்கிற ஜனங்கள் பாக்கியவான்கள். அவர் இருட்டில் வெளிச்சந்தருவார்; துக்கத்தில் சந்தோஷமும், மரணத்தில் ஜீவனுங் கொடுப்பார். அவர் நம்முடைய காப்பு, அவரால் நாம் காக்கப்படுவோம்; அவருடைய ரட்சிப்புதான் நமக்குக் கேடகம்; விசுவாசம் அதைப் பிடித்துச் சத்துருக்களுக்கு விரோதமாய் அதைப் பிரயோகிக்கிறது. அவர் நமக்கு வெளிச்சந் தந்து நம்மைக் காப்பாற்றுவார்; அவர் நம்மைக் கைவிடவுமாட்டார்; குறைவடைந்து கெட்டுப்போக விடவுமாட்டார். சூரியன் பிரகாசிக்கிற விதமாக, தம்முடைய தயவுகளைத் தாராளமாக, உதாரமாக, பரிபூரணமாகக் கொடுக்கிறார்; அவரிடத்தில் பரிபூரணமுண்டு. அதைச் சந்தோஷமாய்க் கொடுப்பார்; இன்று நாம் அவரிடத்தில் காத்திருந்து, அவருடைய சமுகப் பிரகாசத்தில் நடப்போமாக. ‘கர்த்தருக்குப் பயந்து, அவருடைய ஊழியக்காரருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிற உங்களில் எவன் அந்தகாரத்தில் நடந்து வெளிச்சமற்றிருக்கிறான். அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவன்மேல் சார்ந்திருக்கக்கடவன்’. அவருடைய இருதயம் நம்முடைய பேரில் சார்ந்திருக்கிறது; தம்முடைய வாக்குத்தத்தங்களை நமக்கு நிறைவேற்றுவார்; அவருடைய தன்மையின் ஒவ்வொரு லட்சணத்தையும் நம்மில் மகிமைப்படுத்துவார். அவருடைய கிருபையின் ஐசுவரியத்தை என்ன சொல்ல!
கர்த்தரே நீர் என் ஆதாரம்
சுகம் வெளிச்சம் ஆநந்தம்;
இம்மையில் என் நல் நம்பிக்கை
மறுமையில் பேரின்பம்;
நீர் என் சூரியன் கேடயம்
நான் கெலிக்கும் என் பந்தயம்;