ஜூன் 10
‘நான் அல்பாவும் ஒமேகாவுமாயிருக்கிறேன்‘
வெளிப்படுத்தின விசேஷம் 22:13
இயேசு துவக்கமும், முடிவுமாயிருக்கிறார். அவர் நம்முடைய ரட்சிப்பின் பெரிய வேலையைத் தொடங்கினார், நடப்பிக்கிறார், முடிப்பார். நாம் பார்க்கவேண்டிய முதற்பொருள் அவரே. நாம் கடைசியாகக் காண்கிறதும் அவர்தான். நாம் அவரைப்பற்றி தான் முதலாவது கற்றுக்கொள்ளவேண்டும். நித்தியகாலமெல்லாம் அவரைப்பற்றிக் கற்றுக்கொண்டேயிருக்கலாம்; எந்தத் துன்பத்திலும் வருத்தத்திலும் அவர்தான் நம்மண்டையில் முதல் வருகிறார். நம்மை விடவுமாட்டார், தள்ளவுமாட்டார். நம்முடைய கட்டடத்திற்கு அஸ்திவாரம் அவரே, நம்மைக் காக்கிறவரும் அவர்தான். எந்தத் துன்பத்திலும் நாம் முதலாவது அவரையே நோக்கவேண்டும். எந்தக் குறைவையும் அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும். நல்லது, பெரியது, மகிமையானது, சகலமும் அவரிடத்தில் உண்டு. இயேசுவைச் சம்பாதித்தவனுக்கு எல்லாம் சொந்தம் தான். இயேசுவோடு தொடங்கி, இயேசுவோடு சகலத்தையும் நடத்துவோமாக; அப்போது இயேசுவைக்கொண்டே முடிப்போம்; அது பாக்கியமான முடிவு. அவர்தான் நாம் கற்கவேண்டிய பாடம்; அவரை அறியும் பரியந்தம் நாம் ஏதும் அறிந்தவர்களல்ல. அவரையும், அவர் உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவர் பாடுகளோடு ஐக்கியப்படுதலையும் நாம் அறிந்து, அவருடைய மரணத்திற்கு ஒப்பானவர்களானால் எத்தனை நல்லது. இயேசுவை நம்முடைய அல்பாவும், ஓமேகாவுமாக நாளுக்கு நாள் பார்த்து, அவரிடத்திலிருந்து நன்மை கிடைக்குமென்று எதிர்நோக்கி, அவரை மகிமைப்படுத்துகிற அந்த நல்ல வித்தையை நாம் கற்றுக்கொள்ளக் கடவோம்.
இயேசென் நம்பிக்கை திடன்
எனக்காக மரித்தார்,
அவர் தீர்த்தாரென் கடன்
நீதியும் சம்பாதித்தார்;
என் நேச சகோதரன்
நாம் நம்பும் தேவபரன்.