ஜூன் 8
‘தேவன் தம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்?’
ரோமர் 8:31
நேசரே! நாம் இயேசுவை விசுவாசிக்கிறவர்களானால் ஏகோவாவின் லட்சணங்களெல்லாம் நம்மைக் காக்க ஆயத்தப்பட்டிருக்கிறது. நம்மை ஆதரித்து, சவரட்சணை செய்து; நம்மைச் சிநேகிக்க அவர் உடன்படிக்கை செய்திருக்கிறார், வாக்களித்திருக்கிறார், ஆணையிட்டுமிருக்கிறார். அவர் நமக்கானவர், நம்முடைய காரியத்தில் இருக்கிறவர், நம்முடைய சத்துருக்களுக்கு விரோதி; ஆறு துன்பங்களினின்று நம்மை விடுவிக்கப் பிணைபட்டிருக்கிறார்; ஏழாவதிலும் நம்மைக் கைவிடார். நம்முடைய சத்துருக்களை நாம் தைரியமாய்ப் போருக்கழைக்கலாம். தேவன் நம்மோடிருக்கிறார். மனிதன் நமக்கு எவ்வளவு? பிசாசுகள்தான் என்ன செய்யும்? நமக்குக் கிடைத்திருக்கப்பட்ட கனத்தையும், சுகபத்திரத்தையும், சவுக்கியத்தையும் பார்த்து நாமே ஆச்சரியப்படலாம். சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் நமக்குத் துணை. நாம் நன்றியறிந்தவர்களாயிருக்கவேண்டுமே; நியாயமாய் நமக்குக் கிடைக்க வேண்டியதென்ன? நமக்கு இருக்கிறதென்ன? நாம் எதிர் பார்த்ததென்ன? தேவன் நமக்கு வாக்குக்கொடுத்ததென்ன? கிறிஸ்துவில்தான் நாம் வெற்றி சிறந்திருக்கலாம். தேவன் நம்முடைய பட்சமானால்; வேண்டியதெல்லாம் நமக்கு நிச்சயமாய் வரும். தேவன் நம்முடைய ‘பட்சமானால், மனிதரும் பிசாகம் நம்மை ஒருபோதும் மேற்கொள்ளமாட்டார்கள். தேவன் நம்முடைய பட்சமானால் நாம் உலகத்தை மேற்கொண்டு, மரணத்தை ஜெயித்து, என்றுமுள்ள மகிமையைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம். தேவன் நமது பட்சமானால் நமக்குச் சேதம் வருவிப்பவன் எவன்? நம்மைப் பயப்படுத்துவது எது? தேவன் நம்முடையவர். நாம் தேவனுடையவர்கள். இதுதான் நமது மேன்மை, நமது பெருமை, நமது பாக்கியம், நமது மகிமை.
மனுஷர் பேய்களைவிட
இயேசு மா பெலத்தவர்,
அவர் போரில் மறைவிட
மாகவே யாதரிப்பார்;
அவன் முன் தீங்கெல்லாம் ஓடும்
என் நாவு அவரைப் பாடும்.