ஜூன் 6
‘எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்‘
மாற்கு 7:37
இது ஜனக்கூட்டம் ரட்சகரைப்பற்றிச் சொன்ன சாட்சி. அவர் அநேக காரியங்களைச் செய்தார்; ஒவ்வொன்றையும் நன்றாய்ச் செய்தார். இன்று காலையில் நாமும் இப்படிச் சாட்சி சொல்லக்கூடாதா? தமது கிருபையால் நம்மை அழைத்தாரே; எந்த எத்தனங்களைக்கொண்டு, எந்த விதமாய், எந்தக் காலத்தில் நம்மை அழைத்தாரென்று யோசிக்கும்போது, அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தாரென்று நாம் சொல்லவேண்டாமா? அவர் பலவகையாய் நம்மைச் சோதித்தாரே. அவர் சோதித்த நோக்கத்தையும், நம்முடைய துன்பங்களோடு கலந்து அவர் அனுப்பின இன்பங்களையும், அதினின்று அவர் நமக்குக் கட்டளையிட்ட விடுதலையையும் நாம் நினைக்கும்போது, எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தாரென்று சொல்ல வேண்டாமா? பின்னாகப் பார்த்து மறுமையில் பிதாவண்டையில் நமக்குப் பிணையாக நிற்பதையும், நம்முடைய தன்மையை எடுத்துக்கொண்டு, நம்முடைய பாவங்களைச் சுமந்து, நமக்கு நீதியை சம்பாதித்து, நம்மைச் சுத்திகரித்து ரட்சிக்க தம்முடைய ஆவியை அனுப்பினதையும் நாம் பார்க்கும்போது, அவர் சகலத்தையும் நன்றாய்ச் செய்தார் என்று சொல்லவேண்டாமா? நமக்கு வாசஸ்தலங்களை ஆயத்தப்படுத்தி, கல்லறைகளிலிருந்து நம்முடைய சரீரங்களை எழுப்பி,
நம்மை அவருடைய சாயலுக்கு ஒப்பானவர்களாக்கி, பிறகு நம்மைப்பார்த்து: ராஜ்யத்தைச் சுதந்தரிக்க வாருங்கள் என்று அழைக்கும்போது, எவ்வளவு சந்தோஷத்தோடும் நன்றியறிதலோடும் அவர் சகலத்தையும் நன்றாய்ச் செய்தாரென்று சத்தமிட்டு முழங்குவோம்.
பாவிகட்கு தேவநேசம்
எவ்வளவு உதாரம்?
அவர் செய்வதெல்லாம் நலம்
கொடுப்பார் மோட்ச ஸ்தலம்;
நான் அவரிடம் போனதால்
இரக்கமடைந்தால்,
இயேசு நன்றாய்ச் செய்தாரென்று
நான் போற்றுவது நன்று.