ஜூன் 5
ஆண்டவரே, நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர்?’
அப்போஸ்தலர் 9:6
கர்த்தருடைய கிருபாசனத்தண்டையில் இந்தக் கேள்வியை நன்றாய்க் கொண்டுவரலாம். ஏனென்றால், கர்த்தருடைய ஜனங்கள் அவருடைய திராட்சத்தோட்டத்தில் அவருடைய மகிமைக்காக வேலைசெய்யவேண்டியவர்கள். நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலையுண்டு. இன்றைக்கு நாம் செய்யவேண்டியது ஒன்றுண்டு. இயேசு நம்முடைய எஜமான், அவர் நம்மை ஆளும் பாத்தியமுடையவர். தமது இஷ்டப்படி அவர் நம்மிடத்தில் வேலைகொள்ளலாம், நாம் அவருக்குக் கீழ்ப்படியவேண்டியவர்கள். அவர் நமக்கு எவ்வளவோ நன்மை செய்திருக்கிறபடியால், நாம் மனதாரச் சந்தோஷமாய் அவருக்கு எப்பொழுதும் கீழ்ப்படியவேண்டும். நம்முடைய பகை அகன்று போனதா? அவருக்கு ஊழியஞ்செய்து, நாம் அதைக் காண்பிக்கவேண்டும். நமக்கு விசுவாசம், நம்பிக்கை, அன்பு, தாழ்மை, சமாதானம், நன்றியறிதல் இவைகளுண்டா? இந்த நன்மைகளைத் தந்தவருக்குக் கீழ்ப்படிகிறது நமக்குப் பிரியமாயிருக்கவேண்டாமா? நாம் ஊழியஞ்செய்யவேண்டியவர்கள். எப்பொழுதும் ஊழியஞ்செய்யவேண்டியவர்கள், ஒவ்வொரு நாளும் கடைசி நாளாக எண்ணி ஊழியஞ்செய்ய வேண்டியவர்கள். இது மேன்மையான ஊழியம்; மரணப்படுக்கையில் நமக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கத்தக்கது; நியாயத்தீர்ப்பு நாளில் இதைப்பற்றி வெட்கமடையோம். நீ கிறிஸ்துவுக்காக ஏதாவது செய்துவருகிறாயா? இயேசுவின் சிந்தையோடு செய்துவருகிறாயா? நீ செய்கிறது இயேசுவுக்குப் பதிலாக உதவுமென்று எண்ணாதே, உன்னால் கூடியதெல்லாம் செய்; நீ செய்ததெல்லாம் இயேகவின் பாதத்தண்டையில் வை. வி
சுவாசமெங்கேயுண்டோ
சோம்பலுக்கதிடமோ?
எவ்வளவு பலனுண்டோ
கிறிஸ்துவுக்குப் போதுமோ?
தேவனுக்கதைக் கொடுப்பான்
அவர் சித்தத்தைக் காப்பான்.