பிப்ரவரி 1
‘இம்மானுவேல்‘
மத்தேயு 1:23
இந்த நாள் முழுவதும் இயேசுவை உன்னோடிருக்கிற தேவனாக, உன் தன்மையைத் தரித்துக்கொண்ட தேவனாக, உனக்கு ரட்சிப்பையும் ஆறுதலையும் கொடுக்கும்படி மனிதனாய் வந்த தேவனாக கவனித்துப்பார். தேவனைத்தவிர உன்னை ரட்சிப்பார் ஒருவரும் இல்லை. இயேசு உனக்குத் தேவன்தான். ரட்சகர் மனிதனாவது அவசியம். இயேசு மனிதன். அவர் தன் பிதாவின் தன்மையை உடையவர்; ஆதலால் திறமையுள்ளவர். உன் தன்மையையும் உடையவர்; ஆனபடியால் உனக்கு மிகவும் ஏற்றவர். இயேசு தேவனே உன்னோடிருக்கிறார். உன் ஜெபத்தைக் கேட்க,. உன் பயத்தை நீக்க, உன் குறைவைப் போக்க, உன் துன்பத்தில் உன்னோடிருந்து உன்னைத் தேற்ற நாள்தோறும் உன் சிநேகிதனாக உன்னோடிருக்கிறார். தேவன் நம்மோடிருந்து நம்முடைய நடக்கையைப் பார்த்து, நமக்கு வழியைக் காட்டி, நம்முடைய பக்தியீனத்தைக் கண்டித்து, நமக்கு வேண்டியதைத் தந்து, சகலமும் நமக்கு நன்மையாய் முடியும்படி செய்கிறார். இயேசு என்னோடு எப்போதும் இருக்கிறார். ஒவ்வொரு பாவத்தையும் அவர் கண் பார்க்கிறது. அது அவருடைய அன்புக்கு விரோதமானபடியால், அவருடைய மனதுக்கு நோவு உண்டாகிறது என்று நினை. சோதனை உண்டாகும்போது உனக்காகப் பாடுபட்டு இரத்தஞ்சிந்தி மரித்து, இப்பொழுது சகலத்தையும் ஆண்டுவருகிற இம்மானுவேல் என்னும் ரட்சகர் உன்னைப் பார்த்து, நான் பகைக்கிற அந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதே என்று அவர் சொல்லுகிறதைக் கேள். அவருக்கு முன்பாக அன்பாயும், சமாதானமாயும், பரிசுத்தமாயும் நட. அவருடைய மகிமைப் பிர்ஸ்தாபத்திற்காக வைராக்கியமாயிரு. அவர் உனக்குத் தேவன்; உன்னோடிருக்கிற தேவன். அவருடைய ஞானத்தையும், வல்லமையையும், அன்பையும் நோக்கிப்பார். உனக்குச் சுகம் உண்டாகும். உனக்கு வேண்டியதும் கிடைக்கும். பிள்ளை அடைவான பத்தியாய் அவருடைய வார்த்தையை நம்பு.
மனுவேல் நாமம் மதுரம்
காதுக்கின்ப கீதமே;
அவர் சிலுவையின் வெட்கம்
என் ஆவிக்காதாரமே.


