மே 29
‘கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணும்படிக்கு‘
பிலிப்பியர் 8:9
கிறிஸ்துவுக்குள் இருக்கிறது விசுவாசத்தினாலும் அன்பினாலும் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இது எவ்வளவோ விசேஷித்த காரியம். கிறிஸ்துவைவிட்டால் நாம் நிர்ப்பாக்கியர், நிர்ப்பந்தர், ஏழைகள்; குருடர்; நிருவாணிகள். கிறிஸ்துவோடு ஐக்கியப்பட்டால்; நாம் எவ்வளவோ ஐசுவரியவான்கள், எப்போதும் சேமமாயிருப்போம். எவ்வளவோ உயர்ந்திருப்போம். தேவனுடைய சிம்மாசனத்துக்கு முன்பாகக் குற்றமற்றவர்களாயிருப்போம். நாம் கிறிஸ்துவோடு ஒன்றாயிருந்தால், கடன்காரன் ஜாமீன் கொடுத்த பிறகு குற்றமற்றவனாயிருக்கிறதுபோல், கீழ்ப்படிதலினால் நீதிமான்களாக்கப்படுவோம். நோவா பேழையில் ஆதரிக்கப்பட்டதுபோல, அவரால் ஆதரிக்கப்படுவோம். அடைக்கலப்பட்டணத்தில் இருக்கும் கைப்பிசகாய்க் கொலைசெய்தவனைப்போல, நியாயத்தீர்ப்புக்கு விடுதலையாவோம். நித்தியரும் சாவாமையுள்ளவரும் ஞானமுள்ளவருமான ராஜாவின் மனையாட்டியாகக் கனமடைகிறோம். அவரில் கண்டுபிடிக்கப்படுகிறது நலம் என்பதை அப்போஸ்தலன் நன்றாய் விரும்புகிறான். கிறிஸ்துவில் ஒன்றாயிருக்கிறதினால் வரும் பாக்கியத்தை மனதினால் எண்ணவுங்கூடாது, நாவினால் சொல்லவும் கூடாது. ஆகையால் சிநேகிதரே, நான் இப்போது கிறிஸ்துவிலிருக்கிறேனா? அவருடைய உண்மையுள்ள மனையாட்டியாக அவரோடு வாசம்பண்ணுகிறேனா? உண்மையுள்ள ஊழியக்காரனாக அவருக்காகப் பிழைத்துவருகிறேனா? அவரைச்சார்ந்த பிள்ளையைப்போல அவரைப்பற்றி ஜீவனம் பண்ணுகிறேனா? நான் கிறிஸ்துவுக்காகச் சகலத்தையும் விட்டேனா? நான் கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேனா உலகம் எனக்குச் சிலுவையில் அறையப்பட்டது, நானும் உலகத்துக்குச் சிலுவையில் அறையப்பட்டேன் என்று சொல்லக்கூடியவனா என்று இன்று காலமே நாம் ஒவ்வொருவரும் ஆராய்ந்து அறியவேண்டும்.
இயேசு தவிர மற்றெல்லாம்
எனக்கு நஷ்டமாம்;
அவர் நீதி எனக்கெல்லாம்
செய்து முடிக்குமாம்.