மே 22
‘என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்’
யோவான் 14:14
இன்று காலையில் இயேசு நமக்கு இந்த வார்த்தையைச் சொல்லுகிறார். இது நம்மை கிருபாசனத்தண்டையில் உற்சாகப்படுத்தி, பலப்படுத்த, நம்முடைய துன்பங்களிலும் பலவீனங்களிலும் நம்மை ஆற்றித்தேற்ற சொல்லியிருக்கிறது. இயேசுவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமுமுண்டு. பிதா அவருக்குச் சகலத்தையும் ஒப்புக்கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் பெரிய பொக்கிஷம் உண்டு; அவருடைய இருதயம் பட்சமுள்ளது, மிருதுவானது; நம்முடைய குறைவுகளை அவரிடத்தில் கொண்டுபோனால் அவர் அவைகளை நிறைவாக்குவார். நம்முடைய பாவங்களை அவரிடத்தில் கொண்டுபோனால், அவைகளை மன்னித்து ஜெயிப்பார். நமக்கு வருத்தத்தைக் கொடுக்கிற எதையும், நம்மைச் சேதப்படுத்துகிற எதையும், அவரிடத்தில் கொண்டுபோகலாம்; நம்பி அவரிடத்தில் கொண்டுபோகலாம்; அவர் சொல்லுகிறதென்ன? ‘நான் என்ன செய்யவேண்டுமென்று விரும்புகிறாய், என்னை மகிமைப்படுத்துகிற எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன், கேட்கப் பயப்படாதே; நான் சர்வவல்லவர், சந்தேகியாதே; நான் அதைச் செய்வேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.’ விசுவாசியே, இயேசு எப்படிப்பட்டவர் என்று பார்; எவ்வளவு பட்சமுள்ளவர்; எவ்வளவு கிருபை நிறைந்தவர் இன்னும் முறையிடாதே; சோர்ந்துபோகாதே; தியங்காதே; இயேசு உன் சிநேகிதர். அவர் உன் சிநேகிதராயிருக்கிறார்; அவர் உன் சிநேகிதர். ஆகவே நித்தம் அவரிடத்தில் கேள். அவரை முற்றிலும் நம்பு; மனப்பூர்வமாய் நம்பு; அவரைப் பின்பற்று; அவரை உனக்குச் சகலமும் ஆக்கிக்கொள்ளப் பார். அவர் அபாத்திரரா? அவர் உன்னை மோசம்போக்கார்; அவர் பொய் சொல்லுகிறது அசாத்தியம்.
இயேசு உம்மை நோக்குவேன்
வேறெவ்விடம்தான் போவேன்?
உமதன்பென்னைச் சேர்க்கும்
துன்பம் யாவையும் நீக்கும்.