ஜனுவரி 20
‘நீதிமான்களுடைய ஞானம்‘
லூக்கா 1:17
கர்த்தருடைய ஜனங்கள் இலவசமாய்க் கிருபையினாலே, கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாகிறார்கள். தேவனுக்கு முன்பாக அவர்கள் நீதிமான்களாக்கப்படுகிறதுதான் இயேசுவின் கிரியை. இதையே நம்புகிறார்கள், இதையே சொல்லிக் கெஞ்சுகிறார்கள், இதிலேதான் மகிழுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் போதிக்கப்பட்டு, தேவனுடைய உண்மையுள்ள வாக்கை விசுவாசித்து, அதை நிறைவேற்றுவாரென்று நம்புகிறதினால் தங்கள் ஞானத்தைக் காண்பிக்கிறார்கள். தங்களையும் தங்களுக்கு அருமையான சகலத்தையும் அவர் காத்து தமதிஷ்டப்படி செய்ய அவருக்கு ஒப்புக்கொடுக்கிறார்கள். அவருக்கு ஞானமும் அன்பும் தாங்கள் செய்யக்கூடியதைவிட அதிகமாகத் தங்களுக்கு நலமானதைச் செய்யுமென்று உறுதியாய் நம்புகிறார்கள். தேவனுடைய தீர்மானத்துக்கு சகலத்தையும் ஒப்புவித்து, அவர் வாக்குக்குச் சந்தோஷமாய் அமைகிறார்கள். அவருடைய திவ்விய செயலினாலும், கிருபையாலும் சரீரத்துக்கும் ஆத்துமாவுக்கும் வேண்டிய சகலமும் கிடைக்குமென்று பிள்ளைப் பத்தியாய் நம்பியிருக்கிறார்கள். அவருடைய சித்தமே தங்கள் அடைவான சித்தமாகவேண்டுமென்று விரும்புகிறார்கள். சில விஷயங்களில் தங்களுக்கு வித்தியாசப்படுகிற கிறிஸ்தவர்களோடும் அன்பாய் நடந்து, யாவருக்கும், முக்கியமாய் விசுவாசிகளின் கூட்டத்தாருக்கு நன்மைசெய்யப் பார்க்கிறார்கள். சிநேகிதரே! நீங்கள் இந்த ஞானத்தைக் காண்பிக்கிறீர்களா? இந்த விதமாய் நடக்கிறீர்களா? இவைகளைக் கவனிக்கிறீர்களா? பரத்திலிருந்து வருகிற ஞானம் உங்களுக்குண்டா? அது சுத்தமுள்ளதாயும் சாந்தமும் இணக்கமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும் இருக்கிறது.
கனம், பெலன், அன்பு யாவும்
கர்த்தர் வுமக்குரித்தே,
ஞானந் தந்து என்னைக் காரும்
சுத்த ஞானம் உமதே.


