மே 20
‘அவர் அதிகமான கிருபையை அளிக்கிறார்‘
யாக்கோபு 4:6
கிருபாசனத்தண்டை இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற சந்தோஷத்தைவிட அதிக சந்தோஷம் கிடைக்கிறதும், தேவனும் அதிக உற்சாகத்தோடு கொடுக்கிறதும் கூடாத காரியம், தேவதூதர்கள் மகிமையாசனத்தண்டை எவ்வளவு சந்தோஷத்தோடு ஏற்றுக்கொள்ளப்படுகிறார்களோ, நாம் கிருபாசனத்தண்டை அவ்வளவாய் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம், கொடுக்கவேண்டுமென்றுதான் தேவன் சேகரித்து வைத்திருக்கிறார்; அவர் கிருபையின்மேல் கிருபையைத் தருகிறார்; அவர் கொடுக்கிறதில் ஓய்கிறதில்லை; நாம் கேட்கிறதில் ஓய்ந்துபோகிறோம். நாம் சந்தேகமாய்க் கொஞ்சத்திற்காகக் கேட்கும்போது அவரைக் குறைவுபடுத்துகிறோம். விசுவாசத்தோடு சந்தேகியாமல் கேட்கவும், அவர் நிரப்பும்படிக்கு நம்முடைய வாய்களை விரிவாய்த் திறக்கவும் கற்பிக்கிறார். நம்முடைய பாவங்களை மன்னிக்க, நம்முடைய சுபாவங்களைப் பரிசுத்தமாக்க, நம்முடைய சத்துருக்களை ஜெயிக்க, துன்பங்களைச் சகிக்க; நம்முடைய கடமைகளை நிறைவேற்ற, தேவையானதெல்லாம் கிருபை என்கிற வார்த்தையில் அடங்கியிருக்கிறது, நமக்கில்லாவிட்டால் அதற்குக் காரணம் என்ன? நாம் கேட்கிறதில்லை, அல்லது தப்பாய்க் கேட்கிறோம்; அல்லது நம்முடைய இச்சைகளில் செலவழிக்கக் கேட்கிறோம், இன்று காலைக்குத் தேவையான கிருபையிருக்கிறது; அதற்காகக் கேட்போமாக, ஆத்துமாக்களின் நன்மைக்கும் ஏதுவாகப் பிரயோகிக்க அதைக் கேட்போமாக. அவர் கிருபையும் மகிமையும் தருவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையும் வழங்குவார்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது கேளுங்கள், பெற்றுக்கொள்வீர்கள்; தேடுங்கள், கண்டடைவீர்கள். அவர் கடிந்துகொள்ளாமல் யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்க மறவார்.
இவ்வாக்கு மா அதிசயம்
தேவ க்ருபையே ஜெயம்,
அளித்தவ்வாக்கின் உண்மையே
நிறைவேற்றும் மா நயம்.