மே 15
‘நாம் விசுவாசித்து நடக்கிறோம்‘
2 கொரிந்தியர் 5:6
கிறிஸ்தவனுடைய பாதை அடிக்கடி வெகு காடுமுரடானது. எப்பக்கத்திலும் முள்கள் வளர்ந்திருக்கும்; இருண்ட மேகங்கள் மேலே காணும்; மனதைச் சந்தோஷிக்கத்தக்க காட்சிகள் ஒன்றும் இராது. அவன் உத்தமனாய் நடக்கிறவனானால் அதுதான் சரியான பாதையென்றும், துன்பங்கள் உள்ளபடியே இரக்கங்கள்தானென்றும், கடைசியில் அது தேவனுடைய ராஜ்யத்துக்குக் கொண்டுபோகுமென்றும் உறுதியாக விசுவாசிப்பான். துன்பம் தனக்குத் தேவைதான் என்றும், அது தனக்கு நன்மையாகத் தேவன் தெரிந்துகொண்ட வழியென்றும், தேவன் தயவான நோக்கத்தோடு அதை அனுப்பினார் என்றும், தற்கால துன்பங்கள் தனக்கு நித்திய ஜெயமாய் முடியுமென்றும் அவன் நம்புகிறான். உண்மையுள்ள வாக்கின்மேல் சார்ந்து, மாறாத தேவனை நம்பி, துன்பங்கள் தன்னைச் சூழும்போது; இவைகளில் ஒன்றும் என்னை அசைக்கமாட்டா. துன்பங்கள் வழியாய் நான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டும் என்று அறிவேன்; என் தேவன் என்னை ஆதரிப்பார்; அவருடைய கை என்னை காக்கும். இப்பொழுதும் இனிமேலும் என்னுடைய நித்திய ரட்சிப்பினால் அவருடைய கிருபை மகிமைப்படும், எனக்கு வழிதெரியா விட்டாலும் என் தேவனுக்குத் தெரியும், அவர் என்னை நடத்துவார். அவர் என்னை விடமாட்டார், மரணபரியந்தம் எனக்கு வழிகாட்டுவார் என்று சொல்லுவான்.
தேவன் சொன்னதை நம்பி
பற்றிக்கொண்டு நடப்பேன்,
லோகம் விட்டுத் திரும்பி
அவரன்பைப் பிடிப்பேன்;
அவர் சொல்வது நிசம்
என் தேவன் மா பொக்கிஷம்.