மே 14
‘அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்‘
மல்கியா 3:17
யார்? கர்த்தருக்குப் பயந்து அவருடைய நாமத்தை நினைக்கிறவர்கள்; அவரை நேசிக்கிறபடியால் அவரைத் துக்கப்படுத்தப் பயப்படுகிறவர்கள்; எல்லாவற்றிற்கும் மேலாக அவருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்கு ஒப்பானவர்களாய் அவரை மகிமைப்படுத்துகிறவர்கள்; எங்கள் பிதா என்கிற அவருடைய நாமத்தை நினைத்து, அவர் கிருபையும், இரக்கமும், நீடிய சாந்தமும், மகத்துவமும், உண்மையுமுள்ளவரென்று அவரை விசுவாசிக்கிறவர்கள்; பிள்ளைகள்போல் அவரிடம் சேர்ந்து சகலத்தையும் அவர்முன் நடப்பிக்க விரும்பி அவர் சமுகத்தில் நடக்கிறவர்கள்; அவருடைய கனத்தைக் குறித்து வைராக்கியமுள்ளவர்களாய் அவருடைய மகிமைக்காகக் கவலைப்படுகிறவர்கள்; அவருடைய தயவைப்பற்றிப் பேசி, அவருடைய வல்லமையைச் சொல்லி, அவருடைய கிருபையின் ஐசுவரியத்தைப் போற்றுகிறவர்கள்; இவர்கள் என்னுடையவர்களாய் இருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். தன் பிள்ளைகளைப்போல அவர்களை நடத்துவார்; ஆபரணங்களைப்போல அவர்களை மதிப்பார்; தேவதூதர்களின் கூட்டத்தில் தம்முடையவர்களென்று அறிக்கையிடுவார். அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசமுண்டாக்கி, உலகத்தாருக்கும் விளங்காதபடியாய்த் தம்மை அவர்களுக்கு வெளிப்படுத்துவார். அன்பர்களே, இந்த அருமையான வாக்குத்தத்தங்கள் நமக்குண்டா? நாம் தேவனுக்குப் பயப்படுகிறவர்களா? பாவம் அவருக்குக் கனவீனத்தை உண்டுபண்ணுகிறதென்று அதற்காகத் துக்கப்படுகிறோமா? அவருடைய நாமத்தை அன்போடும் பயபக்தியோடும் நினைக்கிறோமா? அப்படியானால் அவர் நம்மைக் கடாட்சிப்பார். காப்பாற்றுவார், நம்மைத் தம்முடைய ஆபரணங்கள் நடுவில் வைப்பார்.
இயேசு ராஜாவின் மகுடம்
வெளிப்படும் நாள் புகழ்ச்சி
அவர் நரக கபாடம்
அடைத்ததே என் மகிழ்ச்சி.