மே 18
‘கர்த்தர் என்னை இதுவரைக்கும் ஆசீர்வதித்து வந்தார்‘
யோசுவா 17:14
விசுவாசியே! இன்று காலமே நீயும் யோசேப்பின் மக்களோடு சேர்ந்துகொண்டு இப்படிச் சொல்லக்கூடுமா? உன் தேவன் உன்னை இயேசுவிலே, இயேசுவின் மூலமாய் ஆசீர்வதித்தார். நீ வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீ தோண்டி எடுக்கப்பட்ட குழியையும் பார். எந்த இடத்திலே, எந்தச் சமயத்திலே தேவன் உன்னை முதலாவது இரக்கத்திற்காகக் கெஞ்சவும், ரட்சிப்பைத் தேடவும் பண்ணினார் என்று ஞாபகம் பண்ணிக்கொள். உனக்கு இரக்கங்காட்ட வருமுன் நீ பட்ட வருத்தத்தையும், நீ சகித்த அடிமைத்தனத்தையும், தேவ ஆவியால் நீ ஆறுதல் அடைந்ததையும் நினை; பிறகு உன் ஆத்துமா விடுவிக்கப்பட்டதையும் நினை; உன் மோசங்களையும், வருத்தங்களையும், கர்த்தர் உனக்காகச் செய்யும் விடுதலையையும், அவர் உனக்குக் காட்டிய தயவையும், உனக்குக்கொடுத்த ஆறுதலையும் நினை; அப்பொழுது அவர் இந்தமட்டும் ஆசீர்வதித்து வந்தார் என்று அறிக்கையிடுவாய். அவர் உன்னை ஆசீர்வதிப்பேன் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். அவர் உண்மையுள்ளவர் என்று நீ கண்டிருக்கிறாய். தகப்பனைப்போல நேசித்து, தாயைப்போல உன்னை ஆதரித்தார். நீ அவருக்குச் செய்த பதில் என்ன? நீ நன்றிகேடாய் நடந்தால் அவர்முன் உன்னைத் தாழ்த்தி, ரட்சகரோடு ஒட்டிக்கொள். அவராலே அவர் மூலமாய்த்தான் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்.
தேவகற்பனை மீறி
மகா அசுத்தனானேன்,
பேய் என்னில் ஆண்டு சீறி
ஜெயம்கொண்டதால் கெட்டேன்:
க்ருபையால் மனம் மாறி
ரட்சிப்புக்கு உட்பட்டேன்.