மே 12
‘அவர்களுக்கு நீதி என்னால் உண்டாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்‘
ஏசாயா 54:17
கிறிஸ்தவன் அதிக காலம் பிழைத்திருந்தால் அதிகமாய்க் கற்றுக்கொள்ளவேண்டும். ஆவியானவர் எத்தனைக்கு அதிகமாய்க் கற்றுக்கொடுக்கிறாரோ, அத்தனைக்கு அதிகமாய் அவன் தன்னை வெறுத்து, தன் சொந்த நீதியை அழுக்கான கந்தையென்று தள்ளுகிறான். அத்தனைக்கு அதிகமாய்ப் பரிசுத்தத்தில் தேறி, தன் கெட்ட சுபாவம் கீழ்ப்படுத்தப்பட்டுவிட்டது என்று கண்டு, தடையின்றி தேவசமுகத்தைப் பெற்று அனுபவிக்கத்தக்க நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளவேண்டும். இதற்குப் பதிலாக அவன் சாத்தானைப்போல் வளருகிறான். உள்ளக் கேடு அதிகம் அதிகமாய்ப் பெலன் கொள்ளுகிறது; அவனுடைய கெட்ட குணம் எவ்வளவோ பயங்கரமாய்க் காணப்படுகிறது; அதினால் அவன் ஒன்றாகிலும் அனுபவிக்கிறதில்லை; தன்னை அக்கிரம பூதம் என்று நினைத்து, தேவன் தன்னை நேசித்து தனக்குத் தயவு காட்டுகிறதைக் குறித்து ஆச்சரியப்படுகிறான். அப்போது கிருபையை அதிகமாய் மதித்து, கிறிஸ்துவைப் பெரிய பொக்கிஷம்போல் எண்ணி, நீதியின் ஈவை எத்தனையோ பெருமையாக்கிக் கொள்ளுகிறான். இப்படிப்பட்ட மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாவதெப்படி? அவனுக்கு நீதி எங்கிருந்து வரும்? ஏகோவா ‘நான் அவனுடைய நீதி’ என்கிறார்; அதை முடித்தவர் இயேசு; அதை நமக்குச் சம்பந்தமாக்குகிறவர் பிதா. அதை வெளிப்படுத்துகிறது சுவிசேஷம். விசுவாசம் அதை ஏற்றுக்கொண்டு, அதைத் தரித்துக்கொண்டு, தேவனுக்கு முன்பாக அதை வைத்துக் கெஞ்சுகிறது. இயேசுவே! உம்மில் தான் எனக்கு நீதியும் பலமுமுண்டு.
இயேசு ரத்தம் என் மகிமை,
அவர் நாமம் என் பெருமை;
இயேசென்னும் மலைமேல் நிற்பேன்,
மற்றதெல்லாம் மணலென்பேன்.