மே 9
‘அவருடைய கிருபையின் மகிமை’
எபேசியர் 1:6
ஆ கிருபையின் மகிமை! அது இலவசமாயும் அபாத்திரருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவருடைய ஆசீர்வாதத்தின் ஐசுவரியங்களை அவர்களுக்குக் கொடுக்கிறது. அவர்களை மேன்மையான கனத்துக்கு உயர்த்துகிறது. பெரிய பாக்கியத்தை அவர்களுக்கு வாக்களிக்கிறது. எல்லாம் அதன் மயந்தான். கிருபையைவிட இலவசமானது ஒன்றுமில்லை. கிருபையின் மகிமை அதன் வல்லமையில் இருக்கிறது. முரட்டாட்டமுள்ள பாவியையும் அது ஜெயித்துவிடும்; கடினமான இருதயத்தையும் கீழ்ப்படுத்தும்; அடங்காத சித்தத்தையும் அடக்கிப்போடும்; இருண்ட புத்தியையும் பிரகாசமாக்கும்; எப்படிப்பட்ட பயத்தையும் தொலைத்துவிடும்; தன்னை எதிர்க்கும் எல்லாவற்றையும் மேற்கொள்ளும்; கிருபை சர்வவல்லமையுள்ளது. கிருபையின் மகிமை அதன் சற்குணத்திலிருக்கிறது. அது ஒருவரையும் சேதப்படுத்தமாட்டாது. அது எத்தனை பேரையோ விடுவித்து, ஆதரித்து, நடத்தி; மகிமைப்படுத்தியுமிருக்கிறது. சிருஷ்டியின் குறைவை நீக்கி தேவனுடைய நிறைவைக் கொண்டுவருகிறது. நிர்ப்பாக்கியமான ஏழைச் சிருஷ்டிகளைச் சீமான்களாக்க மோட்சத்தின் பொக்கிஷங்களைத் திறக்கிறது. தனக்குள்ளதையெல்லாம் கொடுத்துவிடும். தனக்குரிய துதியையும் மகிமையையுமாத்திரம் அது வைத்துக்கொள்ளும். இயேசுவே கிருபாமூர்த்தி, அவரிடத்தில் கிருபையின் அழகெல்லாம், மேன்மை எல்லாம், அருமை எல்லாம் காணப்படும். அது தன் சரியான மகத்துவத்தில் அவரிடத்தில் விளங்கும். இயேசுவே! உம்முடைய இலவசமான வல்லமையுள்ள தயவு நிறைந்த கிருபையை என்னிடத்தில் மகிமைப்படுத்தும்.
அநாத க்ருபா நிதியே!
என் பாவமலை மூடேன்;
என் மகிமையாம் கதியே!
ஆக்கினை நீக்கிப்போடேன்:
இயேசுரத்தம் பூமியெங்கும்
இரக்கம் கூவிக் கெஞ்சும்.