மே 8
‘கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை ரட்சிப்பார்‘
நீதிமொழிகள் 20:22
எந்தக் காலத்திலும் துன்பத்திலும் கர்த்தாண்டையில் போய், உன் காரியங்களை அவருக்குச் சொல்லி, அவருடைய அருமையான வாக்குத்தத்தங்களை எடுத்துக் காட்டி, உனக்காக அவர் வெளிப்படுவார் என்று காத்திருப்பது உன்னுடைய சிலாக்கியம். உன்னுடைய துன்பத்தின் தன்மை, அது அனுப்பப்பட்ட நோக்கம், இதை உனக்குக் காண்பிக்க அவரிடத்தில் காத்திரு. நீ கண்ணியமாய் நடந்துகொள்ள, வேதவாக்கியத்துக்கு ஒத்தபடி சகிக்க, துன்பத்தில் உன்னை ஆதரித்து அதினின்று உன்னை மீட்க, துன்பகாலத்தில் நீ சந்தோஷமாய் உன்னை அவருக்கு ஒப்புக்கொடுக்க, உனக்கு வேண்டிய ஆறுதலுக்காக அவரிடத்தில் காத்திரு. உன் நோக்கங்கள், எண்ணங்கள், விருப்பங்கள் முதலியவைகளைத் தற்சோதனை செய்து அவரிடத்தில் காத்திரு. அவர் தன் வார்த்தையை நிறைவேற்றுவார், உன் ஜெபங்களுக்கு உத்தரவு கொடுப்பார். உன்னை விடுவிப்பார் என்று நம்பி அவரிடத்தில் காத்திரு. நீ அவருக்காக காத்திருப்பாயானால், அவர் உன் பட்சமாவார். அவருடைய இரக்கத்தையும் உண்மையையும் பரிசோதிப்பாய். உன் பலம் புதிதாகும் என்ற நிச்சயம் உனக்குக் கிடைக்கும். நீ ஒருபோதும் வெட்கமடையமாட்டாய் என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். சிநேகிதனே, தேவனை நோக்கி அவரை நம்பி எப்பொழுதும் அவரிடத்தில் காத்திருப்போமாக.
தேவ சித்தத்திற்கமைந்து,
போதுமென்னும் மனதோடு
உமக்கே நான் காத்திருந்து,
உம்மிலே நிலைப்பதோடு
உமக்கே அடங்கச்செய்யும்,
கிருபை என்னில் பொழியும்.