மே 5
‘அவர் மிகவும் வியாகுலப்பட்டார்‘
லூக்கா 22:44
தோழனே! இன்று காலையில் கெத்செமனேக்குப்போய் இந்த அதிசயமான காட்சியைப் பார்க்கக்கடவோம். இதோ நம்முடைய பிணையாளி, தேவனுடைய ஒரேபேறான குமாரன், அவருடைய மகிமையான பிரகாசம், அவருடைய தன்மையின் சுரூபம், அவர் தரையிலே விழுந்து ரத்தத்தில் கிடந்து பெருமூச்சுவிடுகிறார். பிரமிப்படைந்து பயத்தாலும், பயங்கரத்தாலும் நிறைந்திருக்கிறார். அவருடைய ஆத்துமா கலங்கி ஆறுதல் அடையாமலிருக்கிறது. அவர் மரணபரியந்தம் துக்கம் அடைந்திருக்கிறார். மரணத்தின் துயரம் அவரைச் சூழ்ந்திருக்கிறது. நரகத்தின் துயரவேதனை அவரைப் பிடித்திருக்கிறது, அவருடைய குடல்களின் நடுவே அவருடைய இருதயம் மெழுகுபோல உருகுகிறது. அவருடைய தேகமெல்லாம் நடுங்குகிறது. ரத்தவேர்வை வேர்க்கிறது. உரத்த சத்தமாய்க் கூப்பிடுகிறார். அவர் மனம் தள்ளாடுகிறது. அவரைத் தாங்க மனிதர்களுடைய கை காணோம். இது அந்தகாரத்தின் நேரமும் வல்லமையுமாய் இருக்கிறது. நம்முடைய பாவங்கள் அவர்மேல் சுமத்தப்பட்டிருக்கிறது. அவருடைய ஆத்துமா பாவங்களுக்காகப் பலியாக்கப்பட்டிருக்கிறது. ஏகோவா அவரை நொறுக்கச் சித்தமானார். அவருடைய துக்கத்தைப்போல துக்கமுண்டா? அவரிடத்தில் நம்முடைய பாவங்கள் தண்டிக்கப்பட்டு; நம்முடைய அக்கிரமம் பரிகரிக்கப்பட்டிருக்கிறது. நாம் நீதிமான்களாக்கப்படுகிறோம்; அவஸ்தைப்பட்ட இயேசுவை நேசிக்கவேண்டும்.
பேய் உன்னைச் சோதிக்கையில்
கெத்செமனே மட்டும்போ,
மீட்பரே போர்செய்கையில்
ஜெபித்து விழித்துக்கொள்.
இயேசு சுவாமி விடாதே
அவர் சொல் மறவாதே.