மே 3
உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ?’
மீகா 4:9
கர்த்தருடைய ஜனங்களுக்கு ஆலோசனை வேண்டும். இயேசு அவர்கள் ஆலோசனைக்காரர் அளவற்ற ஞானமும், கபடற்ற தயவும், பெரிய கனமுமுடையவரானபடியால் அவர்களுக்கு மிகவும் ஏற்றவர். இலவசமாய், சந்தோஷமாய் காரியசித்தி உண்டாக்கத்தக்கதாய் ஆலோசனை செய்வார். நம்முடைய சத்துருக்களுடைய யோசனையைப் பயித்தியமாக்குவார். இப்படிப்பட்ட ஆச்சரியமுள்ள ஆலோசனைக்காரர் நமக்கிருந்தும், அவரிடத்தில் யோசனை கேட்க, அவரை நம்ப நமக்கு மனமில்லை. உன் ஆலோசனைக்காரன் அழிந்து போனானோ என்று நம்மைப் பார்த்து அடிக்கடி கேட்கிறார்கள். அப்படி இல்லாவிட்டால் ஏன் இந்தக் கலக்கம்? ஏன் இந்தத் தப்பிதங்கள்? பெருமூச்சுகள்? என் ஆலோசனைக்காகவும், உதவிக்காகவும் சிருஷ்டிகளண்டையில் ஓடவேண்டும்? நேசரே நம்மைக் கண்டித்துக்கொள்வது நியாயம், நாம் அவருடைய யோசனைக்குக் காத்திருக்கவில்லை. இயேசுவானவருடைய தொழிலை மறந்து அசட்டைசெய்தோம். இனிமேல் அவருடைய யோசனையின்றி நாம் ஒன்றும் செய்யக்கூடாது. அவருக்குக் கனவீனம் உண்டாக்குகிற மனிதரிடத்தில் போகக்கூடாது. இயேசுவானவரிடத்தில் போகவேண்டாம், அவரை நம்பவேண்டாம், அவரிடத்தில் யோசனை கேட்க வேண்டாம் என்று சொல்லுகிற சாத்தானுக்குச் செவிகொடுக்கவேண்டாம். ‘நான் உனக்கு யோசனை கொடுப்பேன். என் கண் உன்மேல் இருக்கும்’ என்று சொல்லுகிறார்.
கர்த்தரே, நீர் நல்யோசனை
சொல்லி என்னை நடத்தும்.
உம்முட பக்கத்தில் என்னை
வைத்திருட்டில் காப்பாற்றும்
நான் தள்ளாடவொட்டாதேயும்
அலைய விடாதேயும்.