மே 2
‘கிருபையில் வளருங்கள்’
2 பேதுரு 3:18
தற்காலத் தேர்ச்சி போதுமென்றிராதே. தேவன் அதிகம் கொடுப்பார். நாமும் அவர் கொடுக்கிறதை வாங்கி அனுபவிக்கலாம்; அவர் மகிமைக்கென்று செலவிடலாம். நல்ல இடத்திலிருக்கிற மரம் கீழே வேர் பலமடைந்து மேலே கொப்புகள்விட்டு வளர்கிறதுபோல, கிறிஸ்தவனும் வளரவேண்டும். அவன் தேவனுடைய அன்பில் வேர் ஊன்றி, இயேசுவோடு ஒருமைப்பட்டு வளரவேண்டும். நாம் கிருபையில் வளருவோமானால், நம்முடைய நிர்ப்பாக்கியத்தையும் பெலவீனத்தையும் அதிகமாய் அறிந்துகொள்வோம். இயேசுவின் அருமையையும், நிறைவையும்; மகிமையையும் அதிகமாய்ப் பார்ப்போம். நாம் மனிதர்களுக்கு முன்பாக ஜாக்கிரதையாயும், தேவனுக்கு முன்பாகத் தாழ்மையாயும் இருக்கவேண்டும். மாம்சத்தின்மேல் நம்பிக்கை குறைந்துபோனால் ரட்சகரை அதிகமாய் நம்புவோம். கிருபை நம்மை நாமே வெறுக்கச்செய்து நம்மை ரட்சகரண்டையில் சேர்க்கும்; சிரசின்மேல் கிரீடத்தை வைக்கும்: கிருபைதான் ஆத்துமாவுக்கு அழகு; அது தேவனுடைய மகிமை. ஆத்துமா கிருபையில் வளருகிறது, இயேசுவைப்போல சாந்தத்திலும் மனத்தாழ்மையிலும் வளருகிறது. நடத்தையில் ஜாக்கிரதையாயும் உத்தமமாயும் இருக்கிறது. நாம் கிருபை பெற்றுக் கொள்ளக்கடவோம்; அதைக் கொடுக்கிறது தேவனுக்குப் பிரியம். நாம் கிருபையில் வளரக்கடவோம்; அது தேவனுடைய கட்டளை. கிறிஸ்து வரும்போது நமக்குக் கிடைக்கும் கிருபைக்காக எதிர்பார்க்கக்கடவோம். ஏனென்றால் தேவன் அதைக் கொடுத்திருக்கிறார். இயேசுவானவரின் மகிமை வெளிப்படும் நம்பிக்கைக்காக காத்திருப்போமாக.
சுத்த கிருபா கனிகள்
பக்தரில் தோன்றினாலும்,
அவைகள் ஊறும் கேணிகள்
கிறிஸ்துவில்தான் முற்றிலும்
நான் உம்மைக் காணுமட்டுக்கும்
க்ருபை என்னில் வர்த்திக்கும்.