ரோமர் – அதிகாரம் 5
1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.
2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.
3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து,
4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம்.
5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது.
6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்.
7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான்.
8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.
9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம்.
12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.
13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது.
14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.
16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது.
17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே.
18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று.
19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள்.
20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.
21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.
ரோமர் – அதிகாரம் 6
1 ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.
2 பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக, ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?
4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.
5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.
6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்.
7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே.
8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூட பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம்.
9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை.
10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார்.
11 அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக.
13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.
14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.
16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா?
17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம்.
18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்.
19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள்.
21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே.
22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் – அதிகாரம் 7
1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா?
2 அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள்.
3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.
4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்.
5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது.
6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்.
7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே.
8 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணமில்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே.
9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன்.
10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன்.
11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது.
12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது.
13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று.
14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்.
15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.
16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே.
17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை.
19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன்.
20 அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.
21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன்.
22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்.
23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.
24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.