மாற்கு – அதிகாரம் 14
1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.
2 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள்.
3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.
4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?
5 இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள்.
6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்.
7 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள். உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன்.
8 இவள் தன்னால் இயன்றதைச் செயதாள்; நான் அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள்.
9 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான்.
11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்கு பணம்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான்.
12 பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.
13 அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்.
14 அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ, அந்த வீட்டு எஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள்.
15 அவன் கம்பளம் முதலானவைகளை விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
16 அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள்.
17 சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார்.
18 அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
19 அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ, நானோ? என்று ஒவ்வொருவரும் அவரிடத்தில் கேட்கத்தொடங்கினார்கள்.
20 அவர் பிரதியுத்தரமாக: என்னுடனே கூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி;
21 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார்.
22 அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
23 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் எல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.
24 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரψக்கும் திராட்சப்பழரڠΤ்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடின பின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப் போனார்கள்.
27 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.
28 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார்.
29 அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான்.
30 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்கு முன்னே, நீ மூன்று தரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
31 அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும், உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள்.
32 பின்பு கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி;
33 பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி,
35 சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு:
36 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.
37 பின்பு, அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?
38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
39 அவர் மறுபடியும் போய், அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
40 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள்.
41 அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார்.
42 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள் போவோம் என்றார்.
43 உடனே, அவர் இப்படிப் பேசுகையில் பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடே கூடப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும், தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான்.
45 அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான்.
46 அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள்.
47 அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
48 இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும், தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்;
49 நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.
50 அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள்.
51 ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள்.
52 அவன் தன் துப்பட்டியைப் போட்டுவிட்டு, நிர்வாணமாய் அவர்களைவிட்டு ஓடிப்போனான்.
53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள்.
54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான்.
55 அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை.
56 அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை.
57 அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று,
58 அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
59 அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
61 அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான்.
62 அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
63 பிரதான ஆசாரியன் இதைக்கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?
64 தேவதூஷணத்தைக் கேட்டீர்களே. உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.
66 அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து,
67 குளிர்காய்ந்து கொண்டிருக்கிற பேதுருவைக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள்.
68 அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று.
69 வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள்.
70 அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நின்றவர்கள் பேதுருவைப்பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள்.
71 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான்.
72 உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான்.
மாற்கு – அதிகாரம் 15
1 பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
2 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
3 பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
4 அப்பொழுது, பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
5 இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.
6 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது.
7 கலகம் பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல் பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான்.
8 ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத்தொடங்கினார்கள்.
9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
10 அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான்.
11 பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள்.
12 பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால் யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.
13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள்.
14 அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
15 அப்பொழுது பிலாத்து ஜனங்களை பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான்.
16 அப்பொழுது, போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து,
17 சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி:
18 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,
19 அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள்.
20 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
21 சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள்.
22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய்,
23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
24 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.
25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம் மணிவேளையாயிருந்தது.
26 அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின் மேல் கட்டினார்கள்.
27 அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேக்கூடச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
28 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று.
29 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலையைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே,
30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள்.
31 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை.
32 நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள்.
33 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று.
34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
35 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
36 ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான்.
37 இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஜீவனை விட்டார்.
38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.
40 சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
41 அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள்.
42 ஓய்வுநாளுக்கு முந்தின நாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது,
43 கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான்.
44 அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான்.
45 நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான்.
46 அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான்.
47 அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.
மாற்கு – அதிகாரம் 16
1 ஓய்வுநாளான பின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு,
2 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து,
3 கல்லறையின் வாசலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
4 அந்தக்கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள்.
5 அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக்கண்டு பயந்தார்கள்.
6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.
7 நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
8 நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற்போனார்கள்.
9 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
10 அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடே கூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள்.
11 அவர் உயிரோடிருக்கிறார் என்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை.
12 அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார்.
13 அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை.
14 அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதய கடினத்தைக்குறித்தும், அவர்களைக் கடிந்துகொண்டார்.
15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.
17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18 சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார்.
20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.