சங்கீதம் – அதிகாரம் 82
1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார்.
2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.)
3 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள்.
4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள்.
5 அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது.
6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன்.
7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள்.
8 தேவனே எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.
சங்கீதம் – அதிகாரம் 83
1 தேவனே மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே சும்மாயிராதேயும்.
2 இதோ உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள்.
3 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள்.
4 அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.
5 இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும்,
6 கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும்,
7 ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
8 அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.)
9 மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு,
10 நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும் அக்கினி ஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும்,
15 நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றிலே அவர்களைக் கலங்கப்பண்ணும்.
16 கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி,
18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.
சங்கீதம் – அதிகாரம் 84
1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!
2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.
3 என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.
4 உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.
6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.
7 அவர்கள் பலத்தின்மேல் பலமடைந்து சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.
8 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)
9 எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
10 ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.
11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.
12 சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

