செப்டெம்பர் 5
‘நான் புறம்பே தள்ளுவதில்லை‘
யோவான் 6:37
எவ்வளவு பலத்த விசுவாசியும் சிலவேளை பயத்துக்கு இடங்கொடுக்கிறதுண்டு. தேவன் தனக்காகச் செய்த யாவற்றையும் சந்தேகிக்கிறதுமன்றி, தேவ வசனத்திலுள்ள எந்த வாக்குத்தத்தமும் தனக்குரியதோ என்று கலங்குகிறதுமுண்டு. அப்படிப்பட்ட சமயங்களில் முன்னே நாம் நல்ல ஆறுதலை மொண்டுகொண்ட கிணற்றண்டைக்குப்போய் ஆறுதலைத் தேடுகிறது நல்லது. அப்படிப்பட்ட கிணறுகளில், இன்றைக்கு நாம் தெரிந்துகொண்ட இயேசு சொன்ன வார்த்தைகள் மிகவும் விசேஷித்தது. இந்த வார்த்தைகளில் தம்மிடத்தில் வருகிற எந்தப் பாவியையும் தாம் தள்ளப்போகிறதுமில்லை, தம்முடைய சிம்மாசனத்தைவிட்டு தள்ளப்போகிறதேயில்லை என்று தீர்மானம் பண்ணிப்போட்டதாகச் சொல்லுகிறார். அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும், எத்தனை பாவங்களைச் செய்தவனாயிருந்தாலும், அவன் வயசு நிலைமை எப்படிப்பட்டதாயிருந்தாலும், அவனைத் தள்ளவேமாட்டேன் என்கிறார். அவருடைய கரமும் மனமும் எப்பொழுதும் திறந்திருக்கிறது; அவர் நின்று நம்மைத் தம்மண்டைக்கு அழைக்கிறார். நான் புறம்பே தள்ளுவதில்லை என்கிறார்; அவர் இப்படிச் சொல்லி இரண்டாயிரம் வருஷமானது. கோடாகோடி பாவிகள், பலவிடங்களிலுமுள்ளவர்கள், பல தன்மையுள்ளவர்கள், அவரிடத்தில் வந்து, அவரை உண்மையுள்ளவரென்று கண்டிருக்கிறார்கள். நாம் சந்தேகத்தினாலும் பயத்தினாலும் அவரை விசனப்படுத்தி, நம்மை வாதித்துக்கொள்ளாமல், அவர் வார்த்தையை நம்புவோமாக. அவர் நம்மை ஏற்றுக்கொள்வார், நம்முடைய பாவங்களை மன்னிப்பார், நம்மை ஆசீர்வதிப்பார்.
இயேசு நீர் சகலமும்
என்றெப்போ நான் ருசிப்பேன்
முத்திரை எனக்கீயும்
சந்தேகியாமல் செய்யும்.