செப்டெம்பர் 4
‘உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷம்‘
எபேசியர் 1:13
நம்முடைய ரட்சிப்பு பாவத்தினின்றும், சாபத்தினின்றும், தேவகோபத்தினின்றும் உண்டாகும் விடுதலைதான். இது நம்மாலே முடியாது. தேவன் நம்மை இலவசமாய்ப் பரிபூரணமாய், நித்தியமாய் மீட்கும்பொருட்டுத் தம்முடைய சொந்தக் குமாரனை நம்முடைய தன்மையைத் தரித்தவராய் அனுப்பினார். சுவிசேஷம் நம்முடைய ரட்சிப்பைப்பற்றிய நல்ல செய்தி, தேவன் அன்புமயம், கிருபை ஆளுகை செய்கிறது. மோட்சம் திறந்திருக்கிறது. நம்முடைய குற்றம், பெலவீனம், பயம் நீங்குகிறதற்கு வழியுண்டு. நம்மை ஏற்றுக்கொண்டு நம்மை ஆசீர்வதித்து, தம்மோடு என்றும் நம்மை மகிமைப்படுத்த, தேவன் காத்திருக்கிறாரென்று நமக்குத் தெரியப்படுத்த அது அனுப்பப்பட்டிருக்கிறது. கிறிஸ்து செய்த எல்லாவற்றையும், அவரிடத்திலிருக்கிற எல்லாவற்றையும் நமக்கு முன்வைத்து, வந்து அதை ஏற்றுக்கொண்டு, உபயோகித்து, பாக்கியராயிருங்களென்று அது நம்மைக் கூப்பிடுகிறது. அது நாமாய் சொந்தமாக ஏதாவது செய்யவேண்டுமென்று கேட்கிறதில்லை. தன்னிடத்திலுள்ளதெல்லாவற்றையும் ஏழைகளும், முடவரும், குருடருமான பாவிகளுக்கு இலவசமாய்க் கொடுக்கிறது. நம்முடைய நிர்ப்பந்தத்தைப் போக்க நம்முடைய குறைவுகளை நீக்கவேண்டியதெல்லாம் அதினிடத்திலுண்டு. அது கொண்டுவருகிறதற்கு மிஞ்சி நாம் ஆசிக்கமுடியாது. அது கிருபை நிறைந்தது, மகிமை நிறைந்தது, அருமையான சுவிசேஷம், மகிமை நிறைந்த செய்தி. அதை நாம் அங்கீகரித்து, விசுவாசித்து, தினசரி அதின்படி நடந்து பாக்கியசாலிகளானால் நல்லது. விசுவாசத்தாலுண்டாகும் சந்தோஷத்தினாலும், சமாதானத்தினாலும் நம்மை நிரப்பவும், நம்பிக்கையில் நாம் விருத்தியடையச் செய்யவும், அவநம்பிக்கை, சந்தேகம், பயம் இவைகளை நாம் மேற்கொள்ளவும் வேண்டுமென்பதுதான் அதன் நோக்கம். தேவன் கொடுத்த சுவிசேஷத்தில் பலத்து விசுவாசம் வைத்திருப்போமானால், நம்முடைய ஆத்துமங்களுக்குப் பலத்த ஆறுதல் கிடைக்கும்.
இயேசு உனக்காக மரித்தார்,
மன்னிப்பும் சம்பாதித்தார்;
நம்பிப்போ மன்னிப்படைவாய்,
நம்பு மோட்சம் பெறுவாய்.