செப்டெம்பர் 2
‘மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு‘
ரோமர் 11:20
விசுவாசிகள் தங்களைக்குறித்து சிலவேளைகளில் எண்ணவேண்டியதற்கு மேலாக எண்ணிச் சோதனையில் விழுகிறார்கள். தங்களுக்கும், மிகவும் நிர்ப்பந்தரான பாவிகட்குமிருக்கிற வித்தியாசம் தேவனுடைய சுத்த இலவசமான கிருபையினால் உண்டாயிருக்கிறதை மறந்துவிடுகிறார்கள். தாங்கள் பலவீனரானதால், மேற்கொள்ளப்படத்தக்கவர்கள். புத்தியீனரானதால், திரிந்து அலையத்தக்கவர்கள். பாவிகளானதால், லேசாய் மோசம் போகத்தக்கவர்கள் சாத்தான் பெலசாலி, விடாகண்டன், மோசமுள்ளவன், தந்திரக்காரன், குரோத நினைவுள்ளவன், கெடுக்கப்பார்க்கிறவன், சுறுசுறுப்பாய், விடாமுயற்சியாய், கெடுதல் செய்யத் திரிகிறவன். உலகம் ஏய்க்கத்தக்கது. கண்ணி வைக்கிறது, சூதுள்ளது, நயஞ்சொல்லிக் கெடுக்கிறது என்பதை அவர்கள் மனதில் வைக்கவேண்டும். இதை நன்றாய் யோசிப்பார்களானால், விழிப்பற்றிருக்கமாட்டார்கள். பெருமையுள்ள கிறிஸ்தவன் கனியற்றவனென்பது நிச்சயம்; தேவன் அவனை விழும்படி விட்டுவிடுவார். ஆதலால் தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி பார்க்கக்கடவன், தாவீது விழுந்தான், பேதுரு விழுந்தான், இன்னும் அநேகர் விழுந்தார்கள். மேட்டிமைச் சிந்தையயாயிராமல், பயந்திரு; உன் ரட்சிப்பை பயத்தோடும், நடுக்கத்தோடும் தேடு என்று இவர்கள் பெருமூச்சோடும், கண்ணீரோடும் நம்மை எச்சரிக்கிறார்கள். தாழ்ந்த சிந்தையுள்ளவர்களாய்த் தேவன்பேரில் சார்ந்துகொண்டிருக்கிற குணத்தைப் பேணக்கடவோம். அப்போது சுகபத்திரமாயிருப்போம். பரிசுத்தரும் பாக்கியருமாயிருப்போம். தெய்வ பயந்தான் நம்முடைய காப்பு.
இயேசுவே! என்னைத் தாங்கும்
இல்லாவிட்டால் கால் வாங்கும்,
நான் ஏதுமற்ற பாவி,
உமக்கு முழு துரோகி,
எனக்கு வழி காட்டும்
நல் உபதேசம் ஊட்டும்.