செப்டெம்பர் 1
‘மீட்கிறவர்‘
ரோமர் 11:26
கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்கு வேண்டிய ஒத்தாசைசெய்து, அவர்களை மீட்க அபிஷேகம் பெற்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்காக ஞானம் அறிவென்னும் பொக்கிஷங்கள் அவரிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. சகல மாம்சத்தின்மேலும் அதிகாரம் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு தேவலட்சணமும் அவருக்கு ஆதீனம். மனிதர் கையில் தேவன் நம்மை ஒப்புவிக்கவில்லை; நம்மைத்தானே நாம் விடுவித்துக்கொள்ள நம்மை விட்டுவிடவில்லை. இயேசுவை நோக்கிப் பார்க்கவேண்டும். அவர் நம்மை எல்லாத் தீங்கிலும் நின்று விடுவித்து, நம்மைத் தம்முடைய மகிமையின் ராஜ்யத்துக்கென்று பாதுகாப்பதினால் மகிமைப்படுகிறார். எந்தச் சோதனையிலும் நாம் அவரிடத்தில் ஓடவேண்டும்; எந்த மோசத்திலிருந்தும் அவரே விடுவிப்பாரென்று எதிர்பார்க்கவேண்டும். நம்முடைய கெஞ்சுதலைக் கேட்டு, நமக்காக வெளிப்பட்டு, நம்மை ஆசீர்வதிப்பது தான் அவருடைய விசேஷித்த வேலை. சரீர சத்துருக்களினின்று மாத்திரமல்ல, ஆத்தும சத்துருக்களினின்றும் நம்மை விடுவிக்கிறார். வெளியரங்கமான சத்துருக்களினின்று மாத்திரமல்ல உள்ளான சத்துருவின் கைக்கும் நம்மைத் தப்புவிக்கிறார். நம்முடைய அருமையான கர்த்தருக்கு இருக்கும் இந்தப் பேரை நாம் மறவாமல், மற்றெல்லாரையும் நீக்கி, அவரையே நம்முடைய மீட்பராகப் பிடித்துக்கொள்வோமாக. எந்த வருத்தத்திலும் முதலாவது அவரிடத்தில் போய், எந்தச் சோதனையிலும் அவர்பேரில் சார்ந்து இருப்போமானால், ஒத்தாசை தேவையாயிராமல் போகுமட்டும் அவர் நம்மை விடுவிப்பார்; அவர் உன்னை ஆறு துன்பங்களிலிருந்து விடுவிப்பார்; ஏழு துன்பங்களில் உன்னைத் தீமையணுகாது. இயேசுவை விருதாவாய் நோக்கிப் பார்த்தவனுமில்லை. தேவனை விருதாவாய் நம்பினவனுமில்லை.
நம்பிக்கெட்டவனில்லையே
நம்பாதவனுக்குத் தொல்லையே.
கிறிஸ்தோர் துக்கிப்பதேன்?
சந்தோஷிக்கவேண்டுமே;
குறைகள் உண்டாவதேன்?
சொந்த ரட்சகர் உண்டே;
ரட்தம் சிந்தி மீட்பார்;
அவர் விண்ணப்பம் கேட்டார்.