ஜூன் 18
‘நான் உங்களை திக்கற்றவர்களாக விடேன்‘
யோவான் 14:18
விசுவாசிகள் துன்பமாகிய இருட்டில் நடக்கும்போது இயேசு தங்களைக் கைவிட்டாரென்று கலங்குகிறார்கள்; இது இயல்புதான். ஆகிலும் தேவவசனத்திற்கு விரோதம். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. அவர் நம்மோடு இராவிட்டால், நமக்கு வேண்டியதைச் செய்யமாட்டார்; அவர் அன்புள்ளவரானதால் நம்மைவிட்டுப் பிரியவுமாட்டார்; நம்மை அனாதைப்பிள்ளைகளாக விடார்; நாம் அவரையே சார்ந்திருக்க வேண்டும். நமக்கு வேண்டிய ஆறுதலை அவர்தான் தருவார். அவர் தயவுகாட்டி நம்மோடிருந்தால்தான் அந்த ஆறுதல் நமக்குக் கிடைத்துக்கொண்டிருக்கும். தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதலின் ஊற்று அவரே. அவருடைய சமுகத்தோடு அவருடைய ஆறுதல்களும் சேர்ந்திருக்கிறது. கொஞ்சகாலம் நம்மைக் கண்டிக்க, நம்மைப் போதிக்க, நம்மைத் திருத்த அவர் நம்மைவிட்டு அந்த ஆறுதல்களை எடுத்துப்போடுகிறதுண்டு. ஆகிலும் அவைகள் திரும்பிவரும்; அவர் அப்படித்தெளிவாய்ச் சொல்லியிருக்கிறார். அது மாறாமல் அப்படியே இருக்கிறது; அவருடைய தன்மையும் அன்பும் ஒன்றுதான். அவர் தந்த அருமையான வாக்கை நாம் பிடித்துக்கொள்ளவேண்டும்; அதை அவர்முன் வைத்துக் கெஞ்சவேண்டும்; உறுதியாய் நம்பவேண்டும்; நாம் திக்கற்ற பிள்ளைகளாகவேமாட்டோம். நம்முடைய பிதா என்றும் உயிரோடிருக்கிறார். நம்மை ஏற்றுக்கொள்ளும் வீடு எப்போதும் ஆயத்தமாயிருக்கிறது. நம்முடைய நம்பிக்கை அழியாது. சிநேகிதரே! இயேசு சொன்ன இந்த அருமையான வார்த்தையைச் சொல்லிக்கெஞ்சுங்கள்; இவர் சொன்னபடி செய்யச்சொல்லிக் கேளுங்கள்; அவர் மகிமையை நாடுங்கள்; உங்களுக்குரிய ஆறுதல் நிச்சயமாய்க் கிடைக்கும்; அவர் நம்மைத் திக்கற்றவர்களாகவிடார்.
தேவாவியே தாருமே
விசுவாசம் நம்பிக்கை
ஆறுதலை ஊற்றுமே.
நடத்தும் உமது கை.
உண்மையால் ஆதரிப்பார்
திக்கற்றவனாய் விடார்.