பிப்ரவரி 2
‘விண்ணப்பங்களின் ஆவி‘
சகரியா 12:10
ஆவிக்குரிய ஜெபங்கள் எல்லாம் ஆவியினால் உண்டாகின்றன. நம்முடைய குறைவைக் காண்பிக்கிறவர் அவர். இயேசுவின் நிறைவை நமக்குத் தெரியப்படுத்துகிறவர் அவர். பலவீனத்தில் உதவிசெய்கிறவரும் அவர்தாம். ஜெபம்பண்ணுகிறதற்கான ஆசையை அவர்தாம் தருகிறார். தாராளமாய் விண்ணப்பம் செய்கிறதும் அவருடைய ஈவுதான். பாவம் எவ்வளவு பயங்கரமானது! பரிசுத்த ஆவி எவ்வளவாகத் தம்மைத் தாழ்த்துகிறார்: அவர் நமக்காகப் பரிந்துபேசுகிறார். பெருமூச்சுகளால் விண்ணப்பம்பண்ணுகிறார். பாவம் நம்மைக் கெடுத்திருக்கிறது. தேவகுமாரனுடைய பலி ஒன்றுதான் நம்முடைய பிராயச்சித்தத்துக்கு உதவும். நாம் பலவீனரானபடியால், ஆவியானவர் மாத்திரம் நாம் பெற்றுக்கொள்ளத்தக்கவிதமாய்க் கருத்தாயும் விசுவாசத்தோடும் ஜெபிக்க நமக்குத் திறமை கொடுப்பார். சிநேகிதரே, நம்முடைய கடமை எவ்வளவு பெரியது. அசட்டையினாலும், உலக சிந்தனையினாலும், வெறுப்பான குணத்தினாலும் அவருக்குத் துக்கமுண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஆவிக்கென்று விதைப்பீர்களானால், நித்திய ஜீவனை அறுப்பீர்கள். அவர் இயேசுவைக்குறித்து உங்களுக்குச் சாட்சி கொடுத்து, சமாதானத்தாலும் சுயாதீனத்தாலும் உங்களை ஆசீர்வதிப்பார்.
ஜெபம் செய்ய மனம் தாரும்
ஓயாமல் நான் மன்றாட;
தாமதித்தும் நீரே வரும்
பிசாசோடு போராட.
எனக்குக் கிருபை அளியும்;
தெய்வ பயம் தாருமே,
பாவத்தைப் பார்க்க விழியும்
தந்து என்னைக் காருமே.


