ஜனுவரி 31
‘நாம் தேவனைப்பற்றி மேன்மை பாராட்டுகிறோம்‘
ரோமர் 5:11
இது ஒவ்வொரு விசுவாசியினுடைய சிலாக்கியம். இயேசு செய்த கிரியையின் மூலமாய்த் தேவன் அவனோடு ஒப்புரவாயிருக்கிறார். அவனுக்கு விரோதமாகச் சாட்டப்பட்ட குற்றங்கள் நீங்கிப்போயிற்று. அவன் பாவங்களெல்லாம் இலவசமாய் முற்றிலும் மன்னிக்கப்பட்டுப்போயிற்று. அவன் கிறிஸ்துவில் அங்கீகரிக்கப்பட்டு, நேசிக்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டவனாய், தேவனுக்குமுன் நிற்கிறான். அவனுக்கு தேவன் அன்பு மயம், அவனோடு தேவன் சமாதானமானார். இப்போது அவன் தேவனுடைய பிள்ளை. தேவன் இப்படிச் சொல்லுவதை நாம் நம்பி, விசுவாசத்தினால் அதை உண்மையென்று பிடித்தோமானால். தேவனில் நாம் மகிழ்ச்சியை அடைவோம். சொல்லமுடியாத மகிமை நிறைந்த சந்தோஷத்தால் ஆனந்தங்கொள்ளுவோம். நம்முடைய நிலையைக்குறித்துச் சந்தோஷப்படுவோமானால், அது மாறிப்போம். சிநேகிதரைக்குறித்துச் சந்தோஷப்படுவோமானால், அவர்கள் மரித்துப்போவார்கள். ஆஸ்தியைக் குறித்துச் சந்தோஷப்படுவோமானால், அது பறந்துபோம். தேவனில் சந்தோஷப்படுவோமானால் நம்முடைய சந்தோஷத்துக்குச் சில வேளைகளில் தடைவந்தாலும், நமது சந்தோஷத்துக்குக் காரணமாகிய பொருள் என்றும் மாறாமல் அப்படியே நிற்கும். நாமும் நித்திய நித்திய காலமாய் மகிழுவோம். அன்பர்களே, இயேசுவில் யெகோவாவைப்பாருங்கள். அப்பொழுது அவரை இரக்கங்களின் தகப்பனும், சகல ஆறுதலுக்கும் தேவனுமாகக் காண்பீர்கள். உங்கள் தேவனாக, உங்கள் பங்காக, என்றுமுள்ள உங்கள் சகலமுமாக அவரில் சந்தோஷியுங்கள். இந்த நாளில் தேவனை உங்கள் பிதாவாக, உங்கள் சிநேகிதராக, உங்கள் ரட்சகராக எண்ணிச் சந்தோஷப்படுங்கள். இப்படிச் சந்தோஷப்பட்டு மிகவும் களிகூருங்கள்.
பரமனைச் சேர்ந்து
அவர் முன்னே பணிந்து,
நானும் போற்றிப் பாடுவேன்
அவரைப்போல் துதிப்பேன்;
தூதர்களே எந்த வேளை
வந்து சேர்வேனுங்களை.


