ஜனுவரி 23
‘ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்‘
மாற்கு 4:40
சீஷர்கள் மோசத்தில் அகப்பட்டிருந்தார்கள். அவர்கள் இருதயம் பயத்தால் நிறைந்திருந்தது. அவர்களைப்பற்றிய கவலை இயேசுவுக்கில்லையென்று எண்ணினார்கள். அப்படி எண்ணாவிட்டால் இப்படிப்பட்ட பயம் அவர்களுக்குள் இராது. அன்பர்களே! அருமையான ரட்சகர் கையில் நீங்கள் இருக்கிறீர்கள். அவர் உங்களையும் உங்கள் காரியங்களையும் நடத்திவருகிறார். உங்கள் தலையின் மயிரெல்லாவற்றையும் எண்ணியிருக்கிறார். ஒவ்வொரு நிமிஷமும் உங்களைப்பற்றி விழிப்பாயிருக்கிறார், உங்களோடிருக்கிறார். அவருடைய கண் உங்களைவிட்டு எடுபடுகிறதில்லை. அவருடைய சர்வ வல்லமை உங்களைக் காக்கிறது. அவருடைய சம்பூரணம் உங்களுக்குத் தேவையானதைத் தருகிறது. அவருடைய ஞானம் உங்களை நடத்துகிறது. நீங்கள் என்றும் பரிசுத்தராய், பாக்கியராயிருந்தால்தான் அவருடைய லக்ஷணங்களெல்லாம் மகிமைப்படும். அவர்களால் நான் மகிமைப்படுகிறேன் என்றார். நீங்கள் ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்? இயேசு உங்களுக்குச் சமயத்துக்கேற்ற சகாயர். அவர் எக்காலத்திலும் நேசிக்கும் அன்பன், அவர் உங்கள் கேடகம்; உங்கள் பெரிய பலன். ஒருவேளை நீங்கள் அவரைவிட்டு அலைந்தீர்களாக்கும். சாத்தான் அவநம்பிக்கைகொள்ளச்செய்கிறான். உங்கள் மனச்சாட்சியும் குற்றஞ்சாட்டுகிறது. போங்கள், உடனே திரும்புங்கள், ஒரு நிமிஷமாவது தாமதம் பண்ணவேண்டாம். உங்கள் குற்றத்தோடு அவர் பாதத்தில் விழுந்து, சகலத்தையும் அவருக்கு அறிக்கையிட்டு, அவருக்கு உங்களை மறுபடியும் முற்றிலும் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களைக் கிருபையாய் ஏற்றுக்கொள்ளுவார்; தாராளமாய் நேசிப்பா்ர்; தமது ரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பத்தருவார்.
பக்தர் பயப்படலாமோ?
அவர் மலைக்கலாமோ?
எதிர் பாராதிருக்கையில்
தோன்றுவாரே ஜெபிக்கில்.


