மே 23
இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்‘
பிலிப்பியர் 3:20
நம்முடைய அருமையான ரட்சகர் இப்பொழுது தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார். தமது சத்துருக்கள் தமக்குப் பாதபடியாக்கப்படுவார்கள் என்று காத்திருக்கிறார். அவர் சீக்கிரம் வருவார்; அந்தக் காலம் தீவிரிக்கிறது; அவர் வெளிப்படுங்காலத்தை நாம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். கிறிஸ்தவன் தேவனுடைய நாள் வரும் என்று காத்திருந்து எதிர்நோக்கித் துரிதப்படவேண்டும். முதலாம் தாம் வந்ததுபோல, இரண்டாந்தரமும் நிச்சயமாகவே வருவார். இரவில் திருடனைப்போல வருவார். தமது மகிமையிலே எல்லாப் பரிசுத்த தூதரும் அவரைப் புடை சூழ்ந்து வருவார்கள். அவர் ஆள வருவார். தமது ஜனங்களுக்குப் பெலனளிக்க, தமது சத்துருக்களைத் தண்டிக்க வருவார். கர்த்தருடைய வருகையைக்குறித்து நாம் சோம்பல்காரராய் கவலையற்றவர்களாய் ஏனோதானோ என்று இருக்கக் கூடாது. அவர் நம்மை ரட்சிக்க வருகிறார். நாம் கருத்தான ஜெபத்தோடும், ஆசையோடு கூடிய நம்பிக்கையோடும், உருக்கமான அன்போடும், உண்மையான ஆவலோடும், ஜாக்கிரதையுள்ள ஆயத்தத்தோடும், அவர் வருகையை எதிர்பார்த்திருப்போமாக. அவர் வரும்போது அடிமைத்தனத்திலிருந்து பூமி விடுதலையாக்கப்பட்டு, தேவபுத்திரரின் மகிமையால் சுயாதீனத்துக்குள்ளாகும்? சிருஷ்டிகளின் பெருமூச்சுகள் தணிந்துபோம். கர்த்தருடைய ஜனங்கள் செய்யும் வேலைகளுக்கும் ஜெபங்களுக்கும் உத்தரவு உண்டாகும்; நீதியின் கிரீடங்கள் கொடுக்கப்படும்; நாம் அவரில் நிலைத்திருப்போமாக, அப்போதுதான் நமக்கு நம்பிக்கையுண்டாகும்; அவர் வருகையில் அவருக்கு முன்பாக நாம் வெட்கமடையோம்.
பாவிக்காய் மரித்த இயேசு
வானத்திலிறங்குவார்,
கோடி தூதரோடு
வந்து ஆரவாரிப்பார்,
அல்லேலூயா
கர்த்தர் பூமியாளுவார்.


