மே 21
‘உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்‘
மல்கியா 2:15
விசுவாசியின் ஆவி பொறுமையும் அன்பும் தாழ்மையுமாய் இருக்கவேண்டும். அவன் சகலவிதமான கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும்; மற்றெந்த துர்க்குணமும் நீங்க, உருக்கமான இரக்கத்தையும், தயவையும், தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு, மன்னிக்கிறதற்கு மனதுள்ளவனாயிருக்கக் கற்பிக்கப்படுகிறான். கசப்பும் சண்டையும் குற்றம்பிடிக்கிறதுமான ஆவி கிறிஸ்துவின் ஆவிக்கு விரோதமானது; மன்னிக்க மனதில்லாதவன் கிறிஸ்தவனாயிருக்கமாட்டான். நீங்கள் மனிதருக்கு அவர்களுடைய தப்பிதங்களை மன்னியாமற்போனால், என் பரமபிதா உங்களுக்கு மன்னிக்கமாட்டார் என்று இயேசு ரட்சகர் சொன்னார். நீங்கள் இன்ன ஆவியையுடையவர்கள் என்று அறியீர்களென்பதாய் உங்களைப்பற்றி சொல்லாதபடிக்கு உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். இயேசுவினிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அவர் மனத்தாழ்மையும் சாந்தமுமாயிருந்தார்; பொறுமையுள்ளவரும் மன்னிக்கிறவருமாயிருந்தார், சத்துருக்களுக்குத் தயவு காட்டி பட்சமாயிருந்தார்; பெருமையும், விரோதமும் மன மேட்டிமையுமான இருதயமுள்ளவன் நொறுங்குண்ட எஜமானோடு ஐக்கியமாவதெப்படி? சிநேகிதரே, நம்முடைய ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருப்போமாக. தன் ஆவியை ஆளுகிறவன் ஒரு பட்டணத்தை ஜெயிக்கிறவனைவிடப் பெரியவன்; அடக்கி ஆளாத ஆவி மதில்களும் வாசல்களும் விழுந்துபோன பட்டணத்தைப்போலிருக்கிறது. அது எப்பக்கத்திலும் சத்துரு வருவதற்குத் திறந்துகிடக்கிறது. கர்த்தாவே, என் ஆவியைப் பரிசுத்தமாக்கும்.
ஆவி பரம புறாவே!
என்மேலே இறங்குமேன்,
சமாதானம் அன்புதரவே
நான் மேல் நோக்கச் செய்யுமேன்,
என் மனோவாக்குக் காயமும்
மகிமை வாப்பண்ணும்.