ஜனுவரி 16
‘நீ சுகமாயிருக்கிறாயா?’
2 ராஜாக்கள் 4:26
இயேசு உன் ஆத்துமாவுக்கு அருமையாயிருக்கிறாரா? பாவத்தைக் குறித்தாவது, அன்புள்ள ரட்சகருடைய சமுகங்கிடைக்கவில்லையே என்றாவது நீ துக்கப்படுகிறாயா? விசுவாசத்தில் பலசாலியாயிருந்து தேவனை மகிமைப்படுத்துகிறாயா? உன் பரம பிதாவோடு ஏக ஐக்கியமாயிருக்கவேண்டுமென்று வாஞ்சிக்கிறாயா? உலகம் உன் பாதத்துக்குக் கீழாக இருக்கிறதா? எல்லாப் பரிசுத்தவான்கள் மேலும் அன்பென்னும் அனல் மூளுகிறதா? எல்லாவற்றிற்கு மேலாக தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுகிறாயா? துன்பகாலத்தில் அவருடைய பாதத்தில் விழுந்து: ‘கர்த்தாவே, எனக்கு உதவிசெய்யும்’ என்று கூப்பிடுகிறாயா? அப்படியானால் நீ சுகமாயிருக்கிறாய். உன் ஆத்துமாவில் உயிரிருக்கிறது. அந்த நல்லாவி உன்னைப் போதித்துவருகிறார். இயேசுவைவிட உலகத்தையும் தேவனோடு ஐக்கியப்படுவதைவிட உலக இன்பங்களையும் அதிகமாய் மதிக்கிறாயா? தற்சோதனையை அசட்டை செய்து, வேதவசனம் உனக்கு ருசியற்ற போசனம்போல் உனக்கு வெறுப்பாயிருக்குமானால் உனக்குச் சுகமில்லை. ஒழுங்கான ஜெபத்தினாலும், கர்த்தருடைய விஷயங்களில் காணப்படும் வைராக்யத்தினாலும் ஜீவ அப்பத்தின் மேலுள்ள ஆசையாலும், கர்த்தருடைய வழிகளிலோடும் ஜாக்கிரதையினாலும் ஆத்துமத்தின் சுகம் வெளிப்படவேண்டும். உன் ஆத்துமா வியாதியாயிருக்கிறதா? நல்ல வைத்தியனாகிய இயேசுவண்டைக்கு உடனே ஓடு. அவர் உனக்குத் தமது ரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பக் கொடுக்கவும், அவருடைய ஆவியால் உன்னைத் தாங்கவும் அவரைப் பார்த்துக் கெஞ்சு. உன் அக்கிரமங்களைக் குணபடுத்துவார். உன்னை இலவசமாய் நேசிப்பார்.
நான் ஏழைப் புழுவாகிலும்
என் ஆவி சந்தோஷிக்கும்;
என் ஏசு எப்புசலிலும்
தோன்றி அவர் கைகாக்கும்;
கொடுத்த வாக்கை மறவார்,
எத்தீங்கிலும் தற்காப்பார்.


