ஜனுவரி 12
‘துக்கப்பட்டுத் திரிகிறேன்‘
சங்கீதம் 38:6
நீ துக்கப்படுவதற்குக் காரணமென்ன? இயேசு ஒருவர் இருந்தால் நீ துக்கப்படவேண்டியதில்லை. பாவம் தவிர உனக்குத் துக்கத்தைத் தருவது ஒன்றுமில்லை. தேவனுக்கு முன்பாக உன் நடத்தை நன்றாகயிருக்கவில்லை என்று துக்கப்படுகிறாயா? உன் இருதயம் இவ்வளவு கெட்டதாயிருக்கிறதென்றா துக்கப்படுகிறாய்? அல்லது துஷ்ட மனிதர் தேவனுடைய கற்பனைகளை மீறி இருக்கிறார்களே என்று துக்கப்படுகிறாயோ? ஒருவேளை இயேசு தமது முகத்தை உனக்கு மறைத்ததினால், நீ அவருடையவனென்கிற குறிப்புகள் மங்கி மறைந்து போயிற்றென்று துக்கப்படுகிறாயோ? இயேசுவைக் காணாமல் நீ துக்கப்பட்டாலும், நீ மலைக்கலாகாது. அவர் மறுபடியும் வருவார். மறுபடியும் உனக்கு இரங்குவார். இருதயத்தின் கேட்டைப் பார்த்துத் தேவதூதனும் அழுவான். ஆகிலும் அதைச் சுத்திகரிக்கும் விலையேறப்பெற்ற அருமையான இரத்தத்தை மறவாதே. பரிசுத்தமாக்கும் கிருபை வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிறதை விட்டுவிடாதே. உன் நடத்தையிலும், உன் இருதயத்திலும் காணப்படும் அசுத்தங்களையும் குறைவுகளையும் பார்த்துக்கொண்டு நில்லாதே. உன்னைக் குணமாக்கும் எத்தனங்களாகிய இயேசுவின் ரத்தத்தையும் கிருபையையும் அதிகமாய்ப் பார். அவர் வாக்குத்தத்தம் பண்ணியதை வாசித்து நம்பு. அவருடைய கிருபாசனத்தண்டையில் உன் பாவங்களை அறிக்கையிட்டுக் கெஞ்சு. அவர் காட்டும் வழியில் பொறுமையோடு காத்திரு, விழித்திரு. மட்டுமிஞ்சி துக்கப்பட்டு அவருடைய ஆவிக்கு வருத்தமுண்டாக்காதே. அவர் பக்ஷமற்றவரல்ல, அவர் ஒருபோதும் உன்னைக் கைவிடார். துக்கப்படுகிற யாவருக்கும் ஆறுதலளிக்க அவர் அபிஷேகம் பண்ணப்பட்டார்.
பக்தனே கலங்காதே,
மகிழ்ந்திரு அழாதே,
வேதனை பெருகியும்
தேவனே விடுவியும்
என்று கெஞ்சு, போர் நீங்கும்.
தேவ கை யாவும் தாங்கும்.


