ஜனுவரி 8
நான் உனக்குத் துணை நிற்கிறேன்
ஏசாயா 41:13
தேவன் நம்மை எங்கே நடத்துகிறாரோ அங்கே நம்மை ஆதரிப்பார். நமக்கு மிஞ்சின வருத்தங்கள் வழியிலிரா. அதிக பெலவீனமும் நேரிடாது. அவருடைய கரம் நமக்கு நீட்டப்பட்டிருக்கிறது. விசுவாசத்தைப் பிடித்து, ஒத்தாசை கிடைக்குமென்று நம்பி நடந்துபோகவேண்டும். மோசத்தில் அவருடைய ஜனங்களுக்கு அவருடைய வல்லமையுள்ள புயமே ஆதரவு. அவர்களுடைய பெலவீனத்தில் அதுவே அவர்கள் பெலன். துன்பகாலத்தில் ஏற்ற உதவி அவரே. அவர் சமீபத்திலுள்ள தேவன். பெலவீனத்தில் அகப்பட்டுத் துன்பப்படுகிறாயா? அவருடைய வார்த்தையைச் சொல்லிக் கெஞ்சு. அது மகா தெளிவு, உண்மையுள்ளது, நிச்சயமானது, அவர் பொய் சொல்லார், மோசஞ்செய்யார். உன்னுடைய பெலவீனத்திலே அவருடைய பெலன் பூரணமாய் விளங்கும். பயப்படாதே, தாழ நித்திய கரங்களிருக்கிறது. உன் ஆத்துமாவில் பெலன் தந்து, உன்னைப் பெலப்படுத்துவார்; அவர் சர்வவல்லவரானதால், உனக்கு உதவிசெய்யக்கூடியவர், அவர் வாக்குக்கொடுத்திருப்பதால், உதவிசெய்வார். எக்காலத்திலும் கர்த்தரை நம்பு, என்றும் அவர்பேரில் சார்ந்திரு. கர்த்தராகிய யேகோவாவில் நித்திய பெலனுண்டு. அந்தப் பெலனை உனக்குத் தருவேனென்று வாக்குக்கொடுத்திருக்கிறார். நீ ஜெபத்தில் அதைக் கேட்டால், உனக்காக அதைப் பிரயோகிப்பார். பின்னை ஏன் அதிகமாய்க் கலங்குகிறாய்? ஏன் மனஞ்சோர்ந்து போகிறாய்? உனக்குத் துணைநிற்பேனென்கிறார். சொன்னவர், செய்யமாட்டாரா? தாம் வாக்களித்ததை நிறைவேற்றமாட்டாரா?
நீ கலங்கிப்போய் நிற்பானேன்;
நான் உன்னோடிருக்கிறேன்;
விடுவிப்பேன் ஆதரிப்பேன்
என் கரத்தால் தாங்குவேன்;
நான் உன் தேவன்
என் நீதியால் ரட்சிப்பேன்.


