ஜனுவரி 5
மரண பயம்
எல்லாரும் மரிக்கவேண்டும். ஆகிலும் எல்லாரும் ஒன்றுபோல் மரிக்கிறதில்லை. சிலர் திடீரென்று மரிக்கிறார்கள், சிலர் வெகுநாள் நோயிற் கிடந்து மரிக்கிறார்கள்; சிலர் வருத்தமின்றி மரிக்கிறார்கள், சிலர் சந்தோஷமாய் மரிக்கிறார்கள்; சிலர் தங்கள் ஜீவகாலமெல்லாம் மரிக்கப் பயப்படுகிறார்கள், சிலர் அப்படிப் பயப்படுகிறதேயில்லை. இயேசுவின் மூலமாய் மரணத்தைப் பார்த்தாலொழிய அதைப்பற்றிய நினைவும் பயத்தையுண்டாக்கும். சரீரத்தை விட்டு ஆத்துமா பிரிகிறதுதான் மரணம். தேவனை விட்டுப் பிரிகிறது இரண்டாவது மரணம். முதல் மரணத்திற்குட்படுவது அவசியம்; பிந்தினது அப்படி அவசியமுள்ளதல்ல. தேவ அன்பை விட்டு நம்மைப் பிரிப்பதெது? மரணமா? இல்லை. நம்மைச் சிநேகித்தவர் மூலமாய் நாம் ஜெயவீரர். மரணம் சிறைச்சாலையின் கதவைத் திறந்து, அடைக்கப்பட்டவனைச் சுயாதீனனாக்குகிறது. விடுவிக்கப்பட வேண்டுமென்றும், பாவத்தினின்று சுயாதீனர் ஆகவேண்டுமென்றும், பூரண பாக்கியராக வேண்டுமென்றும் நாம் பண்ணுகிற விண்ணப்பங்களுக்கு மரணத்தினால் உத்திரவு கிடைக்கிறது. உயிருள்ள விசுவாசத்தால் இயேசுவோடு நாம் இணைக்கப்பட்டிருப்போமானால், மரணம் நம்மைப் பிரிக்கமாட்டாது. நாம் என்றும் அவருடைய அன்பை அனுபவிக்கத்தக்கதாக அது நம்மை அவருடைய சமுகத்தில்கொண்டுபோய் நிறுத்தும். நாம் தேவனோடு சாவகாசஞ் செய்தால், இரட்சகருடைய வார்த்தையை நம்பினால், பள்ளத்தாக்குக்கு அப்பாலுள்ளதைப் பார்த்தால், மரணத்திற்கு நாம் பயப்படோம். அப்போது இயேசு நம்மை விட்டுப் பிரியமாட்டார். தம்முடைய வாக்கின்படி அவர் நம்மோடிருப்பார். அவர் உண்மையுள்ளவரென்றும், உத்தமரென்றும், அன்புள்ளவரென்றும் நாம் பரீட்சித்தறிவோம். ‘நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்.’
நோய் துன்பம் சாவு பார்த்து
நான் திகிலடைவானேன்?
அதோ கானான் களித்து
நித்திய வீடு சேருவேன்.

