விசுவாசம்

ஏப்ரல் 29

விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது (எபி.11:1).

 

திருமறையை முழுமனதோடு நம்புது விசுவாசமாகும். தேவனுடைய நம்பகத்தன்மையின் மீது நாம் கொண்டிரு;கும் உறுதியாக அது இருக்கிறது. தேவன் உரைப்பவை உண்மையென்றும், அவர் வாக்களித்தவை நிச்சயமாக நிறைவேறும் என்றும் திடநம்பிக்கை கொள்வதாகவும் அது இருக்கிறது. அடிப்படையில், எதிர்காலத்தைக் குறித்ததாகவும் (நம்பப்படுகிறவை), கண்ணிற்குப் புலனாகாதவற்றைக் குறித்ததாகவும்,(காணப்படாதவை) அது இருக்கிறது.

“விசுவாசத்தினால் காலடி எடுத்து வைப்பது வெற்றிடத்தின் ஆழத்திலே அடிவைப்பது போன்று தோன்றுகிறது, ஆனால் அங்கு காலை வைத்தவுடன் பாறை இருக்கிறது” என்று வைட்டியர் என்பார் கூறியுள்ளார். ஆயின் அது அப்படியல்ல! இருளுக்குள் தாவிக்குதிப்பது விசுவாசமல்ல. மிக உறுதியான ஆதாரத்தை அது கோருகின்றது. அந்த ஆதாரத்தை அது தேவனுடைய திருமறையில் காணவிழைகிறது.

ஏதாவது ஒன்றை நீங்கள் உறுதியாக நம்பினால் மட்டும்போதும், அது நிறைவேறும் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளனர் சிலர். அது மூட நம்பிக்கையாகும். அதை விசுவாசம் என்று அழைக்க முடியாது. சார்ந்து கொள்வதற்கு தேவனுடைய வெளிப்பாடாகவும், பற்றிக்கொள்வதற்கு அவருடைய வாக்குறுதியாகவும் அது இருக்கிறது. தேவன் வாக்களித்திருப்பாரென்றால், அது எற்கெனவே நடைபெற்றுள்ளது போன்று நிச்சயமானதாகும். எதிர்காலத்தைக் குறித்து அவர் உரைத்திருப்பாராயின், நிச்சயமாக அது நிகழும். எதிர்காலத்தை நிகழ்காலமாகவும், கண்ணுக்குப் புலனாகாதவற்றைக் காணச்செய்வதாதகவும் அது இருக்கிறது என்று கூறலாம்.

தேவனை நம்புவதால் ஆபத்து ஒன்றும் நிகழாது. அவர் பொய்யுரையார், வஞ்சிக்கமாட்டார். எவரும் அவரை வஞ்சிக்க முடியாது. ஒரு மனிதன் பகுத்தறிவுடனும், புத்திக் கூர்மையுடனும், தத்துவ ரீதியாகவும் செய்யக்கூடிய செயல் தேவைன விசுவாசிப்பதேயாகும். படைப்புகள் படைப்பாளரை விசுவாசிப்தைக் காட்டிலும் எது நியாயமானதாக இருக்கமுடியும்? நிகழக்கூடியவை என்பன மட்டுமின்றி, நிகழக்கூடாதவை என்று கருதப்படுபவைகளையும் விசுவாசம் நிறைவேற்றுகிறது. “சாத்தியக்கூறுகள் அனைத்தும் முற்றுப்பெற்ற பிறகே விசுவாசம் செயல்ப்படத் தொடங்குகிறது. சாத்தியமானவற்றில் தேவன் மகிமைப்படுகிறதில்லை. அது நடக்காது என்று கைவிடப்பட்டபிறகு விசுவாசத்தினால் நடத்தேறுகிறது” என்று ஒருவர் உரைத்துள்ளார்.

விசவாச வாழ்க்கையில் இன்னல்களும் இடைய+றுகளும் உண்டாகும் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடுஞ்சோதனையாலும் வேதனையாலும் தேவன் நம்முடைய விசுவாசத்தைச் சோதித்து அது உண்மையா எனக் கண்டறிகிறார் (1.பேது.1:7). அவருடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதற்கு நெடுநாட்கள் காத்திருக்கவேண்டும். சில வாக்குறுதிகள் நாம் அக்கரை சென்ற பின்னரே நடக்கும். ஆனால், “இன்னல்கள் விசவாசத்தை வளர்க்கும் உணவாகும்” (முல்லர்)

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்” (எபி.11:6). தேவனை விசுவாசியாதவனோ, அவரைப் பொய்யராக்குகிறான் (1.யோ. 5:10). அவரைப் பொய்யர் என்று அழைக்கிற மனிதரிடத்தில் தேவன் எவ்வாறு பிரியப்படுவார்?

முதியோரின் ஆலோசனை

ஏப்ரல் 28

பிள்ளைகளே நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள் (நீதி.4:1)

 

ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு எங்ஙனம் நல்லாலோசனை வழங்கப்படவேண்டும் என்பதை, நீதி மொழிகள் நான்காவது அதிகாரத்தின் முதல் நான்கு வசனங்களில் சாலோமோன் விளக்குகிறான். போதகத்தைக் கேட்டு, புத்திமதியைக் கவனிக்கவேண்டுமென்று தன் தகப்பன் கற்பித்ததையும், பின்னர் தன் மகனுக்குத் தான் அறிவுறுத்துகிறதையும் அங்கு அவன் கூறுகிறான்.

வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறைக் குறிப்புகளை, எவ்வளவு முடியுமோ அவ்வளவாகத் தங்களுடைய சொந்தப் பெற்றோர்களிடத்தில் சிறுபிள்ளைகள் கற்றுக்கொள்வது அறிவுடைய செயலாகும். அதுபோலவே ஆவிக்குரியவற்றை, ஆவிக்குரிய வழிகாட்டியிடம் இளம் விசுவாசிகள் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்பது உண்மைதான். அந்த வழிகாட்டி அவனுடைய கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறவராக, நம்பிக்கைக்குப் பாத்திரராக, அவருடைய அனுபவம் என்னும் செல்வத்திலிருந்து பகிர்ந்தளிக்கிறவராக இருக்கவேண்டும். பெற்றோர் இந்தப் பாத்திரத்தை நிறைவுசெய்வாராயின், அது சிறந்தது. அப்படி இல்லையெனில், அந்த வேலையைச் செய்ய வேறோருவரைத் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும்.

தெய்வபக்தியில் மிகுந்த வளர்ச்சியடைந்த விசுவாசிகள், மிகுதியான நடைமுறை அறிவைச் சேர்த்து வைத்திருப்பார்கள். அவர்கள் தோல்வியைத் தழுவியிருப்பினும், அந்த அனுபவங்களின் மூலமாக, இனி தோல்வியைத் தவிர்க்கத்தக்க நல்ல பாடங்களைக் கற்றுக்கொண்டிருப்பர். இளம் விசுவாசிகள், முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்களைப்போன்று பிரச்சனைகளைப் பல கோணங்களில் ஆராய்ந்து பார்க்கத் தவறிவிடுவர். பகுத்தறிவற்ற வகையில் எதையும் அளவு கடந்து செய்தவிடுவார்கள். ஆனால் முதிர்ச்சியடைந்தவர்களோ அப்படிச் செய்யாமல், சீர்தூக்கிப் பார்த்துச் செய்யக்கற்றவராவர்.

ஞானமுள்ள இளம் “தீமோத்தேயு” க்கள், பவுலைப் போன்றவர்களின் சிறந்த குணங்களைத் தம்மில் வளர்த்துக்கொள்வர். வழிகாட்டியின் விவேகத்தையும், செயல்திறத்தையும் அடைய முயற்சி செய்வார்கள். ஒரு செயலைச் செய்ய முன்னர் அனுபவம் மிக்க ஒருவரிடம் ஆலோசனை கேட்டு, வரக்கூடிய இழிவிலிருந்தும், தவறுகளிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வார்கள். பல்வேறு பிரச்சனைகளை எதிர்த்துநின்று போராடி நற்சாட்சி பெற்றோராய் விளங்கும் பெரியோரை, வயது முதிந்தவர்கள் என்று ஏளனம் செய்யாமல், அவர்களைக் கனப்படுத்துபவராக இருப்பார்கள்.

பொதுவாக, வயதுமுதிர்ந்த பரிசுத்தவான்கள் இளைஞர்களிடம் தாமாகச் சென்று ஆலோசனை தரமாட்டார்கள். கேட்காத ஆலோசனை விரும்பத்தகாததாகப் போய்விடும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் கேட்கப்படும்போது உள்ளார்ந்த உண்மைகளை மனமகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்வர்.

இச்சையை எதிர்த்துப் போராடும் இளைஞர், தேவனுடைய வழிநடத்துதலை அறிய விரும்புவோர், கர்த்தருக்கென்று குடும்பத்தை உயர்நிலைக்குக் கொண்டு வர விரும்புவோர், வரவுசெலவை முறைப்படி செய்யவிரும்புவோர், ஜெபவீரர்களாகத் திகழவிரும்புவோர், யாராக இருப்பினும், ஆவிக்குரிய வழிகாட்டிகளை நாடுவாராயின் அவருடைய பிரச்சனைக்கு வேதத்தின் அடிப்படையில் பதில் கிடைக்கும். நரைமுடிக்குக் கீழாக ஞானம் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது. முன் அனுபவம் மிகுந்தோரிடமிருந்து அறிவுமிகுந்த ஆலோசனைகளைப் பெறுவதை விட்டுவிட்டு, கற்றுக்கொள்வதற்கு ஏன் கடினமான வழியைப் பின்பற்ற வேண்டும்.

கர்த்திரடத்தில் மன உறுதி

ஏப்ரல் 27

கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்தி சொன்னான் (அப்.11:23).

 

அறிவாற்றல் மிக்க சில மனிதர்கள், கிறிஸ்துவுக்கு உண்மையற்றவர்களாக இருக்கின்றனர். இருந்தபோதிலும் அவர்களைச் சுற்றி சில கிறிஸ்தவக் கூட்டத்தார் கூடி அடிமைகளைப் போல நடந்துகொள்கிறதைக் காணும்போது அச்செயல் நம்மை அதிhச்சிக்குள்ளாக்குகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு மனிதரைப் பார்க்கிறோம். இவர் எழுதுவதில் ஆற்றல் மிக்கவர். திருமறையில் காணும் சொற்களுக்கு விளக்கம் அளிப்பதில் நிபுணர். நிகழ்ச்சிகளை மேற்கோள்காட்டி விளக்குவதில் தேர்ந்தவர். எனினும், இயேசு கிறிஸ்து கன்னியின் வயிற்றில் பிறந்தார் என்பதை இவர் ஏற்றுக்கொள்கிறதில்லை. கர்த்தர் செய்த அற்புதங்களுக்கு அறிபூர்வமாக அர்த்தம்கொடுத்து அங்கு வெளிப்படுத்தப்படும் தெய்வீகத்தைப் புறக்கணிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான உயிர்த்தெழுதலை ஏற்றுக்கொள்கிறதில்லை. என்றாலும் உலக நாயகர்களின் அவையில் இயேசு கிறிஸ்துவையும் ஒருவராக நிறுத்தி, அவருக்குப் புகழ்மாலையை இவர் சூட்டுகிறார். இவரைப் பொறுத்தமட்டில், இயேசு கிறிஸ்து உலக நாயர்களில் ஒருவர். இந்த மனிதரின் செயல்கள் யாவும் தேவனுடைய குமாரனுடைய மேன்மையை இழிவுபடுத்துவதாகவே அமைகின்றன. இந்த மனிதர் கர்த்தருக்கு உண்மையற்றவர் என்பதை அறிவது எளிது.

இப்படிப்பட்ட மனிதர்களை, இவர்களது அறிவாற்றல் கருதி ஆதரவளிப்பது நமக்கு மிக்க அதிர்ச்சியைத் தருகிறது. கிறிஸ்துவின் தெய்வீகத்தை இவர் மறுப்பதைப் பொருட்படுத்தாமல், இவருடைய ஆற்றலை உயர்த்திப் பேசுகின்றனர். இந்த மேதைகளின் கூற்றை மேற்கோள் காட்டுகின்றனர். இப்படிப்பட்டோரோடு கூடிப் பழகுகின்றனர். சிலுவைக்குப் பகைஞரை ஏன் அதரிக்கிறீர்கள் என்று நாம் வினவும்போது, பதில் கூறாது மழுப்புகின்றனர். திருமறையில் காணும் அடிப்படைச் சத்தியங்களைச் சுட்டிக்காட்டி, இவ்வகையில் அறிஞர்களுக்கு எதிராகப் பேச முனையும் விசுவாசிகளை இக்கூட்டத்தார் தாக்குவர்.

அறிஞர்கள் கூட்டத்தில் இரட்சகர் காட்டிக்கொடுக்கப்படுகின்ற தருணங்களில் நீதியுடைய கோபத்தோடு கிறிஸ்தவர்கள் பொங்கியெழ வேண்டிய தருணம் வந்துவிட்டது. அவர்களோடு உடன்பாடு செய்து கொள்ளச் சமயமில்லை. கர்த்தருடைய அள்தத்துவம், கிரியை ஆகியவற்றைக் குறித்து அவர்களோடு பேசி முடிவுசெய்யத் தேவையில்லை. நாம் உறுதியோடு நின்று, தேவனுக்கென்று கணக்கிடப்பட்டவராகக் காணப்படவேண்டும்.

தேவனுடைய சத்தியத்தை ஆபத்து எதிர்நோக்கியிருக்கும் வேளையில் தீர்க்கதரிசிகள் சந்தேகத்தோடு பேசவில்லை. அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமாயிருப்பதில் தீவிரமாக இருந்தனர். கர்த்தரை மறுத்தவர்களையும் இழிவுபடுத்தினவர்களையும் வசச்சொல்லால் கடுந்துரைத்தனர்.

கர்த்தருடைய மகிமையைக் கொள்ளையிட முயற்சி செய்தோரை அப்போஸ்தலர்களும் எல்லா வகையிலும் எதிர்த்து நின்றனர். இறையில் அறிஞரின் கூட்டத்திற்கு உண்மையாயிருப்பதைக் காட்டிலும், கிறிஸ்துவுக்கு விசுவாசமாயிருப்பதையே மேன்மையெனத் தெரிந்துகொண்டனர்.

தேவகுமாரனுக்கு உண்மையாயிருத்தலை விட்டுவிடுவதைவிட உயிர்விடுவதையே தியாகிகள் தெரிந்துகொண்டனர். மனிதரால் பாராட்டப்படுவதிலும், தேவனால் பாராட்டப்படுவதில் விருப்பம் கொண்டனர்.

எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு உண்மையாயிருப்பது நமது பொறுப்பாகும். எல்லாவற்றிற்கும் முந்தினபேறானவருக்குரிய ஸ்தானத்தை மறுத்துரைக்கும் அனைவரையும் எதிர்த்து நிற்பதே நமக்குத் தகும்.

பெருமையென்னும் தடைக்கல்

ஏப்ரல் 26

நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது. (யோ.13:8)

 

வியத்தகு நிகழ்ச்சியொன்று நம் கண்முன் காட்சியளிக்கிறது. கர்த்தர் இடுப்பிலே நீண்டதொரு துணியைக் கட்டிக்கொண்டிருக்கிறார். கைகளில் நீர் நிறைந்த பாத்திரத்தை ஏந்திக்கொண்டிருக்கிறார். அவர் தமது சீடர்களின் கால்களைக் கழுவ ஆயத்தமாகிவிட்டார்.

ஆனால் பேதுரு அவரை எதிர்த்து நிற்கிறான். அவனருகில் அவர் வந்தபோது, “நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்று அவன் மறுத்துரைத்தான்.

கிருபை மிக்க பிணிவிடையைக் கர்த்தரிடத்திலிருந்து ஏற்றிட பேதுரு மறுத்ததன் காரணம் என்ன? அதற்கு இருவிதக் காரணங்கள் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒன்று பேதுருவின் தகுதியற்ற தன்மை. மற்றொன்று அவனது பெருமை. கர்த்தரால் ஆற்றப்படும் பணிவிடையை ஏற்றுக்கொள்வதற்குத் தனக்கேதும் தகுதியில்லை என்று பேதுரு எண்ணினான் போலும். இல்லையேல் பேதுருவின் பெருமையும், தான் எவரையும் சார்ந்திருக்கக்கூடாது என்ற எண்ணமும் காரணங்களாக இருந்திருக்கலாம். எதனையும் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடாது என்ற எண்ணமுடையவராகச் சிலர் வாழ்கின்றனர்.

இவ்வித மனப்பான்மையினால் பலர் இரட்சிப்படையாமல் போய்விடுகின்றனர். தங்களது தகுதியினால் அதை அடையவேண்டுமென்றும் அதனைச் சம்பாதிக்கவேண்டுமென்றும் அவர்கள் நினைக்கின்றனர். வேறோருவரிடமிருந்து அதனைப் பெறுவது தங்களுடைய கௌரவத்திற்கு வரும் இழுக்கென்று கருதுகின்றனர். அதனைக் கடன் என்றெண்ணி, தேவனுக்குக் கடன்படுவதை அவர்கள் விரும்புவதில்லை. “தற்பெருமையுள்ளவன் தேவனுக்கு என்றென்றும் கடன்பட விரும்பவதில்லை. அவன் இரட்சிப்படைந்து, கிறிஸ்தவனாகவும் மாறமாட்டான்”.

கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு படிப்பினையைத் தருகிறது. எப்பொழுதும் பிறருக்கு கொடுக்கிற விசுவாசிகளை நாம் சந்தித்திருக்கிறோம். எப்பொழுதும் மற்றவர்களுக்கு அவர்கள் உதவிசெய்வார்கள். உற்றாருக்காகவும், சுற்றத்தாருக்காகவும் தங்களுடைய வாழ்வை ஊற்றி சேவை புரிவார்கள். அவர்களுடைய பெருந்தன்மை போற்றுதற்குரியது. ஆனால் பிறரிடமிருந்து யாதொன்றையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனை விரும்பவும் மாட்டார்கள். கிருபையாகவும் தாராளமாகவும் கொடுக்கக் கற்றிருக்கும் அவர்கள் மற்றவரிடமிருந்து கிருபையோடு பெற்றுக்கொள்வதற்குக் கற்றிருக்க மாட்டார்கள். மற்றவர்களுக்குக் கொடுப்பதினால் கிடைக்கும் நற்பேற்றினை அனுபவிக்கும் அவர்கள், மற்றவர்கள் நற்பேற்றினை அடைவதை விரும்பவதில்லை.

பிலிப்பு நகர விசுவாசிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஈவைக் கிருபையோடு பவுல் பெற்றுக் கொண்டதைக் காண்கிறோம். “உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன்” என்று கூறியே தன் நன்றியை அறிவித்தான் (பிலி.4:17). தனது தேவையைக் காட்டிலும் அவர்கள் பெறுகிற பலனை அவன் மேன்மையாகக் கருதினான்.

“பிஷப் வெஸ்ட்கோட் என்பார் தனது வாழ்வின் இறுதியில் தான் ஒரு பெரிய தவறிழைத்துவிட்டதாகக் கூறினார். எப்போதும் தனது தகுதிக்கேற்ப பிறருக்கு உதவிசெய்வதை நோக்கமாகக் கொண்ட அவர், மற்றவர்கள் தனக்கு உதவி செய்வதை விரும்பமாட்டார். அதன் காரணமாகத் தனது வாழ்வில் இனிமையையும், நிறைவையும், இழந்துவிட்டதையும் உணர்ந்தார். திரும்பச் செலுத்த இயலாத சில நன்மைகளைப் பெறுவதற்கு அவரது மனம் உடன்படவில்லை.!”

எது பெருங்செல்வம்?

ஏப்ரல் 12

அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? (லூக்.16:11)

உலகீயப் பணச்செல்வமும், பொருட்செல்வமும் அநீதியான உலகப்பொருள் என்று இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. மிகுதியாக உலகப்பொருளைச் சேர்த்து வைத்திருக்கிறவனே செல்வந்தன் என்ற பொய்யான எண்ணத்தைப்போன்று வேறு எந்தப் பொய்யும் மேலோங்கிக் காணப்படுவதில்லை. வீடுகள், நிலங்கள் ஆகியவற்றை நாம் அசையாச் சொத்துக்கள் என்று கூறுகிறோம். அவை நம்மைவிட்டு அகன்றுபோவதில்லை என்று நினைத்தே அப்படிச் சொல்கிறோம். வங்கியிலும், நிறுவனங்களிலும் முதலீடு செய்ததற்கான சான்றிதழ்களைப் பத்திரம் என்றுரைக்கிறோம். அவை நமது வாழ்க்கையைப் பத்திரமாகக் காக்கும் என நினைத்தே அப்படிச் சொல்கிறோம்.

ஆனால், அநீதியான உலகப்பொருளுக்கும், உண்மையான செல்வத்திற்குமுள்ள வேறுபாட்டினை லூக்கா 16:11 இல் கர்த்தர் விளக்கிக் காட்டியுள்ளார். செல்வமஇ என்று மனிதனால் கருதப்படுகிறதெதுவும் உண்மையான செல்வமில்லை. இதை விளக்கம் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.

ஜான் ஒரு பயபக்தியுள்ள கிறிஸ்தவர். பகட்டான பெரும் சொல்வந்தர் ஒருவருடைய பண்ணையில் கண்காணிப்பாளராக அவர் வேலை செய்தார். அடுத்த நாள் நடு இரவுக்குள் அந்த வட்டாரத்தில் உள்ள பெரும் செய்வந்தர் ஒருவர் இறந்துபோகப்போவதாக ஓர் இரவில் ஜான் மிகத்தெளிவான ஒரு கனவைக் கண்டார். காலையில் தனது எஜமானைக் கண்ட ஜான், தான் கண்ட கனவைப் பற்றிக்கூறினார். இதைக்குறித்து எவ்வித கவலையும் இல்லாததுபோலக் காண்பித்துக்கொண்டார் அந்த எஜமானர். அவர் நல்ல உடல் நலத்துடன்தான் இருந்தார். மேலும் அவர் கனவுகளை நம்புவதுமில்லை. ஆனால் ஜான் சென்றவுடன், அந்த செல்வந்தர் தனது கார் ஓட்டியை அழைப்பித்து பருத்துவரைக் காணச் சென்றார். தனது உடல் முழுவதையும் பரிசோதிக்கும்புடி வேண்டிக்கொண்டார். அச்செல்வந்தர் நல்ல உடல் நிலையில் இருப்பதாகவே எல்லாச் சோதனைகளும் காட்டின. இருந்தபோதிலும், ஜான் கண்ட கனவு அவரைத் தொடர்ந்து கலக்கமடையச்செய்தது. மருத்துவரிடம் விடைபெற்றுக்கொண்ட செல்வந்தர் அவரைத் தன் வீட்டிற்கு இரவு விருந்திற்கு வரும்படி அழைத்தார். மருத்துவரும் வருவதாக ஒப்புக்கொண்டார்.

இரவு விருந்து வழக்கம்போல் நடந்தது. அதன் பிறகு பல பொருட்களைக் குறித்து உரையாடினார்கள். பழமுறை மருத்துவர் அங்கிருந்து செல்ல முயற்சிசெய்தார். ஆனாலும் அச்செல்வந்தர் அவரை விடவில்லை. ஒவ்வொரு முறையும் இன்னும் கொஞ்ச நேரம் இருந்து செல்லும்படியாகச் செல்வந்தர் மருத்துவரைக் கேட்டுக்கொண்டார். கடைசியில் பன்னிரண்டு மணி ஓசை அடித்தது. தேவனற்ற செல்வந்தர் தனது உள்ளத்திலிருந்த பெருஞ்சுமை நீங்கியவராக, மருத்துவருக்கு விடை கூறி அனுப்பினார். சில மணித்துளிகள் சென்றன. கதவு மணி ஓசை அடித்தது. கதவைத் திறந்த செல்வந்தர் அங்கு ஜானின் மகள் நிற்பதைக் கண்டார். ஐயா என்னுடைய தந்தை சிறிது நேரத்திற்கு முன் இருதய வலி ஏற்பட்டு மரணம் அடைந்துவிட்டார். அதை உங்களுக்கு அறிவிக்க வந்தேன் என்று கூறினாள்.

அன்று இரவிலே அவ்வட்டாரத்தில் உள்ள பெரும் செல்வந்தர் ஜான் இறந்துபோய்விட்டார்.

திறக்கப்பட்ட கல்லறை

ஏப்ரல் 11

இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து. நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள். என்று சொல்லுங்கள். (மத்.28:12-13)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்த சிறிது நேரத்திற்குள்ளாக, அந்த அற்புதத்தை மறைக்க அவருடைய எதிரிகள் ஒரு கட்டுக்கதையை உருவாக்கினர். அவருடைய சீடர்கள் இரவில் கல்லறையைத் திறந்து அவருடைய சரீரத்தைக் திருடிச் சென்றனர் என்னும் பொய்க் கதையைக் கட்டுவதைக் காட்டிலும் பெரிதாக அவர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. (இயேசு கிறிஸ்து மரிக்கவில்லை, மயக்கமே அடைந்தார் என்ற கதை பல நூற்றாண்டுகள் கழித்தே கட்டப்பட்டது). மற்றக் கதைகளைப் போலவே இந்தத் திருட்டுக் கதையும் பல கேள்விகளை எழுப்பக்கூடிய அவலநிலைக்குரியதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக:

காலியான கல்லறையைக் குறித்த உண்மையைக் காவலர்கள் முதலாவது கூறியபோது பிரதான ஆசாரியர் ஏன் கேள்விகேட்கவில்லை? அதனை அவர்கள் நம்பினார்கள். அதை எப்படியாவது திரித்துக் கூறவேண்டும் என்று அவசரப்பட்டனர். கவனமுள்ளவர்களாகக் காவல்காக்க வேண்டிய காவலர் ஏன் உறங்கினர்? வேலை நேரத்தில் உறங்குவதற்கு ரோமர் தருகிற தண்டனை மரணம் என்றாலும் தண்டனையிலிருந்து அவர்களைத் தப்புவிப்பதாக ஆசாரியர் வாக்களித்தனர். ஏன்?

ஒரே நேரத்தில் எல்லாச் சேவகர்களும் எப்படி உறங்கினர்? சிறிது நேர உறக்கத்திற்காக மரணம் அடையவும் ஆயத்தமாயினரோ? காவலர் விழிப்படையாதபடி எவ்வாறு சீடர்கள் கல்லைப் புரட்டினார்கள். சப்தமின்றி அப்பெருங்கல்லை புரட்ட முடியாது. சீடர்கள் எவ்வாறு கல்லைப் புரட்டியிருக்க முடியும்? கல்லறையின் வாசலில் உள்ள ஒரு சிறிய பள்ளத்திற்குள்ளாக விழும்படியாக அந்தக்கல் வைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து புரட்டுவது எளிதன்று. ரோம முறைப்படி, கல்லறையைப் “பத்திரப்படுத்தினார்கள்” என்று சொல்லப்பட்டுள்ளது.

தங்களுடைய ஜீவனைக் காத்துக்கொள்ளும்படி பயந்து ஓடிய சீடர்கள் ஓரிரு நாட்களுக்குள் ரோமக் காவலாளிகளை எதிர்க்கவும், கல்லறையிலிருந்து திருடவும் தைரியம் கொண்டார்கள் என்பதை எவ்வாறு நம்பமுடியும்? அவ்வகையான குற்றம் பெருந்தண்டனைக்குரியது என்பதை அவர்கள் அறிவார்கள்.

காவலர்கள் உறங்கிவிட்டார்களெனில், சீடர்கள் களவாடியதை எவ்வாறு அறிவார்கள்? சீடர்கள் திருடினார்களெனில், சவத்துணியை நீக்கவும் தலைச் சீலையைச் சுற்றி வைக்கவும் நேரத்தை எடுத்துக்கொண்டதன் காரணமென்ன? (லூக்.24:12, யோ.20:6-7). சரீரத்தைச் சீடர்கள் திருடுவதற்கான காரணம் என்ன?

ஒர காரணமும் இல்லை. அவர் உயிர்த்தெழுந்தார் என்று கேள்விப்பட்ட சீடர்கள் வியப்படைந்தனர். நம்புவதற்கு மனமற்றிருந்தனர்.

கடைசியாக, பொய்யென்று அறிந்து, தங்களடைய வாழ்வைப் பயணமாக வைத்து உயிர்த்தெழுதலைக் குறித்து கனம்மிக்க சீடர்கள் எதற்காகப் பிரசங்கிக்க வேண்டும்? “பொய்க்காக மனிதர்கள் மரிக்கமாட்டார்கள்” என்று பால் லிட்டில் என்பார் கூறியுள்ளார். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுத்தார் என்று சீடர்கள் மனதார நம்பினர்.

கர்த்தர் உயிர்த்தெழுந்தார்! ஆம் உண்மையாகவே அவர் உயிர்த்தெழுந்தார்.

சீரிய போதனை

ஏப்ரல் 10

ஒருவரும் உங்களுக்குப் போதிக்க வேண்டுவதில்லை. (1.யோ.2:27)

இவ்வசனத்தை நாம் மேலோட்டமாகக் காணும்போது, இது நமக்கச் சிக்கலாகத் தோன்றுகிறது. ஒருவரும் நமக்கக் கற்றுத்தர வேண்டியதில்லையெனில், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக உயிர்த்தெழுந்த கிறிஸ்து போதகர்களைத் தந்தது ஏன்? (எபேசி.4:11-12) என்னும் கேள்வி உடனடியாக நமது உள்ளத்தில் எழுவது இயற்கையே.

இந்த மடல் எழுதப்பட்டதின் பின்னணியை நாம் அறிவோமாயின், யோவான் இங்கு என்ன பொருள்கொண்டிருக்கிறார் என்பதை எளிதில் அறிந்துகொள்வோம். அந்நாட்களில் “நாஸ்டிக்ஸ்” என்று அறியப்பட்ட அறிவு மார்க்கத்தாரால் சபையானது தாக்கம் கொண்டிருந்தது. இந்தக் கள்ளப்போதகர்கள் தங்களை இயேசு கிறிஸ்துவின் உண்மையான விசுவாசிகள் என்று அறிக்கை செய்து உள்ளுர் சபையில் ஐக்கியம் கொண்டிருந்தனர். இயேசு கிறிஸ்துவின் மனிதத் தன்மையையும், தெய்வீகத் தன்மையையும் குறித்துத் தாங்கள் கொண்டிருந்த தவறான கருத்துக்களைப் பரப்பவேண்டுமென்று நோக்கம் கொண்டவர்களாகச் சபைகளை விட்டுப் பின்னர் வெளியேறினர்.

“நாசிஸ்” (புழெளளை) என்னும் கிரேக்கச் சொல் “அறிவது” என்று பொருள்படும். அந்தக் கள்ளப் போதகர்கள் தாங்கள் பெருத்த அறிவுடையோர் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் கிறிஸ்தவ விசுவாசிகளைப் பார்த்து, “நீங்கள் பெற்றிருக்கிற அறிவு நல்லது. ஆனால் நாங்களோ உங்களைக் காட்டிலும் கூடுதலான அறிவைப் பெற்றிருக்கிறோம். நீங்கள் அறிந்திருக்கிற எளிமையான போதனைகளுக்கும் அப்பாற்பட்ட ஆழமானதும் புதியதுமான இரகசியங்களை நீங்கள் அறியும்படி பூரணவளர்ச்சியை அடைவதற்கு எங்களுடைய போதனைகள் உங்களுக்குத் தேவை” என்பதுபோலச் சொல்லியிருப்பார்கள்.

இவையாவும் தந்திரமான ஏமாற்றுவேலையென்று யோவான் விசுவாசிகளை எச்சரிக்கிறார். இவ்வாறு விசுவாசிகள் மெய்யான தேவவார்த்தைகளைப் பெற்றுள்ளனர். தேவனால் ஏற்படுத்தப்பட்ட ஆசிரியர்களைப் பெற்றுள்ளனர். உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாட்டை பகுத்தறியத்தக்க வகையைத் தூய ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்கள் (ய+தா 3). இதற்கும் மேலாக ஒன்றைப் பெறவேண்டும் என்பது நேர்மையற்ற வஞ்சகமாகும். திருமறையை விளக்கி அதனைச் செயல்முறைப்படுத்துவதே கிறிஸ்தவ ஆசிரியர்களின் வேலையாகும். அதற்கு அப்பாற்பட்டுக் கூறும் போதனைகள் யாவும் மீறுதல் என்றே கருதப்படும். அதனை ஒருபோதும் அவர்கள் செய்யலாகாது.

சபைகளுக்குப் போதகர்கள் தேவையில்லையென்று ஒருபோதும் வேதம் சொல்லவில்லை. அந்நாட்களில் மிகச்சிறந்த வேத ஆசிரியராக யோவான் விளங்கினார். தூய ஆவியானவரே முடிவான அதிகாரத்தையுடையவர் என்று வலியுறுத்திக் கூறுவதில் முதலாவதாகவும், அவர் காணப்பட்டார். தம்முடைய மக்களைப் பரிசுத்த எழுத்துக்களின் ஊடாக வழிநடத்திச் செல்பவரும் தூயஆவியானவரே. எல்லா போதனைகளையும் திருமறையைக்கொண்டு சோதித்துப் பார்க்கவேண்டும். அந்தப் போதனைகள் வேதத்தில் சொல்லப்பட்டவைகளோடு சேர்க்கப்படவேண்டியவையென்றோ, வேதபோதனைகளுக்கு இணையானவையென்றோ சொல்லப்படுமென்றால் அவையாவும் மறுக்கப்படவேண்டியவை. அல்லது வேத போதனைகளோடு ஒன்றித்துச் செல்லவில்லையென்றாலும் அவையனைத்தையும் நாம் மறுத்துத்தள்ளவேண்டும்.

ஒப்பற்ற ஆட்டுக்குட்டி

ஏப்ரல் 9

அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஆட்டுக் குட்டியைப் போல…. (ஏசா.53:7)

ஒரு சமயம் ஆட்டுக்குட்டியொன்று சாகும் வேளையில் அதனை நான் காணநேரிட்டது. அக்காட்சி என் மனதை உருக்குகிறதும், திகில் ஊட்டுகிறதுமாயிருந்தது.

அடிக்கப்படுகிற இடத்திற்கு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருகிறபோது, மிகவும் நேசிக்கப்படத்தக்கதாக அது காணப்படும். அதனைக் காணும் சிறுவர்கள் ஆர்வத்தோடு அணைத்துக்கொள்வார்கள். பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள், கோழிக்குஞ்சுகள், கன்றுகள், குதிரைக்குட்டிகள் எதுவாயினும் குட்டியாக இருக்கும்போது கவர்ச்சிமிக்கதாயிருக்கும். ஆனால் ஆட்டுக்குட்டி எல்லாவற்றிலும் கவர்ச்சிமிக்கதும், பரிவிரக்கம் பாராட்டக்கூடியதுமாய்க் காணப்படும்.

கபடற்ற தோற்றத்துடன் அது நிற்கும். அதனுடைய வெண்மையான கம்பளி எவ்விதக் குறைவுமின்றி, தூய்மையின் தோற்றத்தை வெளிப்படுத்தும். அது மென்மையானதாகவும், அமைதியானதாகவும் காணப்படும். அதற்கு உதவிசெய்வார் ஒருவருமில்லை. தற்காத்துக் கொள்ளவும் அதற்குத் தெரியாது. அதனுடைய கண்கள், அச்சத்தையும் அவல நிலையையும் குறித்துப்பேசி நமக்கு மனவேதனையளிக்கும். அவ்வளவு சிறியதாயிருக்கிற அழகான மிருகம் சாவதற்கு ஒரு காரணமும் இல்லையே என்று தோன்றும்.

அதனுடைய கால்கள் இப்பொழுது கட்டப்பட்டு, பரிதாபதமான நிலையில் பெருமூச்சு விட்டபடியே பக்கவாட்டில் படுத்துக்கிடக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் சாவைச் சந்திக்கப்போகிறதை அறிந்ததுபோல அது காணப்படுகிறது. கைத் திறமை வாய்ந்த கசாப்புக்காரன் கத்தியை அதன் குரல்வளையோடு சேர்த்து வீசுகிறான். குருதி வடிந்தோடுகிறது. மரணவேதனையில் அந்த ஆட்டுக்குட்டி துடிக்கிறது. சிறிது நேரத்தில் ஓரசைவும் இல்லை. மென்மையான ஆட்டுக்குட்டி இறந்துபோயிற்று.

பார்த்துக்கொண்டிருப்பவர் அக்காட்சியைக் காணமுடியாதவர்களாக முகத்தைத் திருப்பிக்கொள்கின்றனர். அக்காட்சி அதிக கவலையைத் தருகிறது. சிலர் கண்ணீரைத் துடைத்துக் கொள்கின்றனர். ஒருவரும் பேசுவதற்கு விரும்புவதில்லை.

விசுவாசத்தினாலே வேறொரு ஆட்டுக்குட்டி மரிப்பதைக் காண்கிறேன். அவரே தேவ ஆட்டுக்குட்டியானவர். அக்காட்சி மிகுந்த ஆசீர்வாதமுடையதும் பயபக்திக்குரியதுமாக இருக்கிறது. அந்த ஆட்டுக்குட்டியானவர் முற்றிலும் அழகானவர். பதினாயிரம் பேரில் சிறந்தவர். அழகானவர்களில் மிகவும் அழகுபொருந்தியவர். கொலைக்களத்திற்கு அவர் கொண்டுவரப்பட்டபோது வாழ்க்கையில் சிறந்த வயதுடையவராக இருந்தார். அவர் கபடற்றவர் மட்டுமல்லர். பரிசுத்தர், தீங்குசெய்யாதவர், அப்பழுக்கற்றவர், பாவிகளோடு சேராதவர், மாசற்றவர், குற்றமற்றவர் அவரே. இவ்வளவு தூய்மைபடைத்த ஒருவர் கொலை செய்யப்படுவதற்குக் காரணம் ஒன்றும் தெரியவில்லை.

ஆனால், தண்டனையை நிறைவேற்றுவோர், அவரைச் சிலுவையில் அறைந்தனர். கைகளிலும் கால்களிலும் ஆணிகள் பாய்ந்தன. பாவிகளுக்குப் பதில் ஆளாக நரகத்தின் வேதனைகளைச் சகித்தார். இதன் மூலமாக அவருடைய கண்கள் அன்பினாலும், மன்னிப்பினாலும் நிறைந்தன.

இப்பொழுது அவருடைய பாடுகளின் நேரம் முடிவடைந்து விட்டது. அவர் தமது ஆவியை ஒப்புவித்து விட்டார். அவருடைய சரீரமோ சிலுவையில் தொங்கிற்று. போர்வீரன் ஒருவன் ஈட்டியால் அவருடைய விலாவில் குத்தினான். அங்கிருந்து குருதியும் நீரும் கொட்டின. தேவ ஆட்டுக்குட்டியானவர் இறந்துவிட்டார்.

என் இதயம் நிறைந்தது. கண்கள் வெந்நீராக வடிகிறது. எனது முழங்காலை முடக்கி அவருக்கு நன்றி பகர்கிறேன். வாழ்த்தி வணங்குகிறேன். எனக்காக அவர் மரித்தார் என்று எண்ணிப்பார்க்கிறேன். அவர்மீது செலுத்தும் அன்பிற்கு முடிவில்லை.

அகத்தின் அழகு

ஏப்ரல் 3

அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ அப்படியே அவன் இருக்கிறான் (நீதி.23:7).

“உன்னைக் குறித்து நீ யாரென்று நினைக்கிறாயோ, நீ அவனல்லன். உன் நினைவு எப்படி இருக்கிறதோ அவ்வாறே நீ இருக்கிறாய் என்ற யு.P. கிப்ஸ் என்பார் கூறுவதுண்டு. இதன் பொருள் யாதெனில், மனது என்னும் ஊற்றிலிருந்தே பண்புகளென்றால், அதிலிருந்து வழிந்தோடும் நீரோடையையும் கட்டுப்படுத்திவிடலாம்.

ஆகவே, சிந்தனை வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதே இன்றியமையாததாகும். இதன் காரணமாகவே சாலோமோன், “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். அதனிடத்தினின்று ஜீவஉற்று புறப்படும்” என்று கூறியுள்ளான் (நீதி.4:23). இங்கே இருதயம் என்னும் சொல் மனது என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாகும்.

பாவம் மனதிலே தொடங்குகிறது என்று யாக்கோபு நினைவுபடுத்துகிறார் (யாக்.1:13-15). நாம் நம்முடைய மனதிலே ஒரு பாவத்தைப்பற்றித் தொடர்ந்து எண்ணிக்கொண்டிருந்தால் முடிவில் அதைச் செய்துவிடக் கூடியவர்களாக இருக்கிறோம்.

சிந்தனையை விதைத்துச் செயலை அறுவடை செய்,
செயலை விதைத்துப் பழக்கத்தை அறுவடை செய்,
பழக்கத்தை விதைத்து நடத்தையை அறுவடை செய்,
நடத்தையை விதைத்து முடிவை அறுவடை செய்!

வெறுப்பைக் கொலையோடு ஒப்பிட்டு, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து சிந்தனை வாழ்வின் தூய்மையை வலியுறுத்திக் கூறுகிறார் (மத்.5:21-22). மேலும், இச்சையுடன் கூடிய பார்வையை விபச்சாரத்தோடு ஒப்பிட்டிருக்கிறார் (மத்.5:28). மனிதன் உட்கொள்கின்ற ஏதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்துவதில்லையென்றும், அவனுடைய சிந்தனையே அவனைத் தீட்டுப்படுத்துகிறது என்றும் கூறியுள்ளார் (மாற்.7:14-23).

நம்முடைய சிந்தனையைக் கட்டுப்படுத்துவதற்குரிய ஆற்றலை நாம் உடையவர்களாயிருப்பதால், அந்தச் சிந்தனைகளுக்கு நாமே பொறுப்பாளிகளாகிறோம். நாம் காமவிகாரத்துக்கேதுவானவற்றைச் சிந்திக்கலாம் அல்லது தூய்மையானதையும் கிறிஸ்துவைப்போலவும் சிந்திக்கலாம். நாம் ஒவ்வொருவரும் ஒரு அரசனைப் போலிருக்கிறோம். அவரவருடைய சிந்தனை வாழ்வே, அவரவர் ஆட்சி செய்யும் நாடாக இருக்கிறது. அந்த அரசாட்சியில் நல்லதை நினைப்பதற்கும், கெட்டதை நினைப்பதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு உண்டு. அது எவ்வகையில் இருக்கவேண்டும் என்பதை நாமே முடிவெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதைக் குறித்து, நீங்கள் செய்யவேண்டுமென்பதற்கான சில நல்லோலோசனைகளைத் தருகிறோம். முதலாவது, எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் மன்றாட்டாகக் கொண்டுவரவேண்டும். “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்தில் புதுப்பியும்” (சங்.51:10). இரண்டாவதாக, கிறிஸ்துவின் சமூகத்தில் அந்த சிந்தனை எவ்வாறு தோற்றமளிக்கும் என்று தீர்க்கவேண்டும் (2.கொரி.10:5). மூன்றாவதாக, ஒவ்வொரு பொல்லாங்கான நினைவையும் அறிக்கை செய்து விட்டொழிக்க வேண்டும். அடுத்தபடியாக, நாம் எதனையும் சிந்திக்காமல் நமது மனதை வெறுமையாக வைத்திருக்கக்கூடாது. ஏற்புடைய சிந்தனைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள் (பிலி.4:8). ஐந்தாவதாக, நீங்கள் வாசிப்பது, பார்ப்பது, கேட்பது ஆகியவற்றில் ஒழுக்கத்தைக் கடைப்பிடியுங்கள். விகாரமானவற்றையும், மாசுவிளைவிக்கக்கூடியவற்றையும் உட்கொண்டு, தூய்மையான சிந்தனை வாழ்வைப் பெறுவோம் என்று எதிர்பார்க்காதீர்கள். கடைசியாக, கர்த்தருக்காக அயராது பணிபுரியவேண்டும். உங்களுடைய மனதை வெறுமையாக வைத்திருப்பீர்களாயின் பொல்லாங்கான விருப்பங்கள் மனதில் உட்புக வழி உண்டாகும்.

விண்ணுலக நற்பேறுகள்

ஏப்ரல் 2
ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.  (2.கொரி.5:10)

முந்தைய பக்கத்தில் நாம் பார்த்தது போன்று, விண்ணுலகம் செல்ல வௌ;வேறு தகுதிநிலை இல்லையென்பது உண்மையாக உள்ளதுபோலவே, நாம் அடையப்போகிற பலன்களில் வௌ;வேறு நிலைகள் உள்ளன என்பது மாபெரும் சத்தியமாகும். நமது செயல்பாடுகள் ஆய்வுசெய்யப்பட்டு சிலர் மிகுதியாகவும், சிலர் குறைவாகவும் பலனடையப்போகின்றனர். அதற்கென ஆய்வு செய்யப்படும் இடம் கிறிஸ்துவின் நியாயசனமாகும்.

விண்ணுலகம் செல்லும் மக்கள் அங்குள்ள மகிமையை அனுபவிப்பதில் வௌ;வேறு திறன்கொண்டவர்களாக காணப்படுவர். அங்கு எல்லோரும் மகிழ்ந்திருப்பர். ஆனால், சிலர் பிறரைக்காட்டிலும் கூடுதலாக மகிழ்ச்சியை அனுபவிக்கக்கூடிவர்களாக இருப்பர். எல்லாருடைய பாத்திரங்களும் நிறைந்திருக்கும். சிலருடைய பாத்திரங்கள் மற்றவர்களுடைய பாத்திரங்களைக் காட்டிலும் பெரியதாயிருக்கும்.

மகிமை பொருந்திய நிலையை அடையும்போது நாம் அனைவரும் ஒன்றுபோலவே இருப்போம் என்ற எண்ணத்தை நாம் விட்டொழிக்கவேண்டும். நாம் எல்லாரும் எழுர்ச்சியற்றதும், மனச்சோர்வு அடைய செய்கிறதுமான ஒன்றுமையை உடையவர்களாய் இருப்போம் என்று வேதம் எங்கும் கற்பிக்கிறதில்லை. மாறாக, உண்மையோடும், ஒப்புவித்த நிலையிலும் வாழ்ந்தமைக்குரிய கிரீடங்களைப் பெறுவோம் என்றே வேதம் கற்பிக்கிறது. சிலர் பரிசுப்பொருட்களை அடைவர். சிலர் இழப்பை அடைவர்.

ஒரேவயது நிரம்பிய இரண்டு இளையர் ஒரே நேரத்தில் மனம் திரும்பினார்கள். தேவனுடைய அரசுக்காகவும் அவருடைய நீதிக்காகவும் தன்னை முற்றிலும் ஒப்புவித்து அதற்கே முதலிடம் கொடுத்து நாற்பது ஆண்டுகளை வெளிநாட்டிலே ஒருவர் கழிக்கிறார். மற்றவரோ தனது வாழ்வின் சிறப்பான பகுதிகளைச் செல்வத்தைச் சேர்க்கப் பயன்படுத்துகிறான். ஒருவர் கர்த்தருடைய செய்திகளைக் குறித்து உற்சாகத்தோடு பேசுகிறார். மற்றவரோ, வாணிபத்தின் செயற்காடுகளைக்குறித்து திறன்பட பேசுகிறார். கர்த்தரை மிகுதியாக அனுபவிக்க முதலாவது நபர் இப்பொழுதே திறன்பெற்றவராக இருக்கிறார். அந்தத் திறத்தை அவர் விண்ணுலகிற்கு எடுத்துச் செல்லுவார். இரண்டாவது நபரோ, கிறிஸ்துவின் ஆள்தத்துவம் மற்றும் கிரியை ஆகியவற்றின் மூலமாக மற்றவர்களுக்கு இணையாக விண்ணுலகம் செல்லத் தகுதி படைத்தவராக இருக்கிறார். ஆனால் ஆவிக்குரிய நிலையில் வளர்ச்சி குன்றியவராக இருக்கிறார். அந்த குன்றிய நிலையையே பரலோகிற்கு எடுத்துச் செல்கிறார்.

என்ன பரிசுப்பொருட்களை பெறப்போகிறோம், எவ்வளவாக நித்திய வீட்டினை அனுபவிக்கப்போகிறோம் என்பதை இங்குவாழும் ஒவ்வொரு நாளும் நாம் நிர்ணயிக்கிறவர்களாக இருக்கிறோம். வேதத்தைப்பற்றிய அறிவினாலும், அதற்கு கீழ்ப்படிகிறதினாலும், நமது ஜெப வாழ்க்கையினாலும், தேவ மக்களோடு நாம் கொள்கின்ற ஐக்கியத்தினாலும், கர்த்தருக்காக நாம் ஆற்றுகிற ஊழியத்தினாலும், தேவன் நம்மிடம் ஒப்புவித்திருக்கிறவைகளில் நாம் காண்பிக்கிற உண்மையுள்ள உக்கிராண ஊழியத்தினாலும் அதனை நிர்ணயிக்கிறவர்களாக இருக்கிறோம். கடந்துசெல்கின்ற ஒவ்வொரு நாளிலும் நித்தியத்திற்கென்று நாம் கட்டுகிறவர்களாக இருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்தவுடன் நாம் எவ்வௌற்றிற்கு முதலிடம் கொடுக்கிறோம், எவற்றைத் தெரிந்துகொள்கிறோம் என்பவற்றில் ஆழமான வேறுபாடுகள் உண்டாகும்.

கிறிஸ்துவுக்குள் நம் தகுதி

ஏப்ரல் 1

அவருக்குள் நீங்கள் பரிபூரணமாயிருக்கிறீர்கள் (கொலோ.2:10).

விண்ணுலகம் செல்லுவதற்குத் தேவையான தகுதியில் பல நிலைகள் இல்லை. ஒருவன், ஒன்று முற்றிலும் தகுதியடைந்தவனாயிருக்கிறான், அல்லது தகுதி இல்லாதவனாயிருக்கிறான். தேவனுடைய தரக்கோலின் உச்சியை நல்லவர்களும் தூய்மையாக வாழ்கிறவர்களும் பிடித்துக் கொள்வார்கள். கயவர்களும்ஈ கொள்ளைக்கூட்டத்தாரும் கோலின் கடைசியில் இருப்பார்கள். இடையில் அவரவர் தகுதிக்கேற்றபடி பலதரப்பட்டோர் இருப்பார்கள் என்பதே மனிதர்களடைய பொதுவான கருத்தாக விளங்குகிறது.

ஆனால் இக்கருத்து முற்றிலும் தவறானதாகும். நாம் முழுவதும் தகுதியுள்ளவர்கள், இல்லையேல் முழுவதும் தகுதியற்றவர்கள். இடைநிலை என்று ஒன்றுமில்லை என்பதே உண்மை.

உண்மையாகவே, நம்மில் எவனும் தன்னில்தானே தகுதிபடைத்தவனில்லை. நாம் யாவரும் நித்திய ஆக்கினையை அடையும்படி குற்றமுள்ள பாவிகளாக இருக்கிறோம். நாமெல்லாரும் பாவம்செய்து தேவமகிமை இழந்தவர்களாக இருக்கிறோம். நாமனைவரும் வழிதவறி, தத்தம் வழியில் செல்கிறோம். நாம் தூய்மையற்றவர்கள், நமது சிறந்த செய்கைகள் யாவும் அழுக்கான கந்தையே.

விண்ணுலகம் செல்வதற்கு நாம் முற்றிலும் தகுதியற்றவர்களாக இருப்பது மட்டுமின்றி, நம்மைத் தகுதியாக்கிக்கொள்வதற்கு எதையும் செய்ய இயலாதவர்களாகவும் இருக்கிறோம். நம்முடைய சிறந்த தீர்மானங்களும், சிறந்த முயற்சிகளும் நமது பாவத்தை நீக்குவதற்குப் பயனற்றவை. தேவன் எதிர்பார்க்கிற நீதியை அவற்றால் நமக்குத் தரவும் இயலாது. ஆனால், தேவன் எதிர்பார்க்கிற நீதியை அவருடைய அன்பு தருகிறது என்பதே நற்செய்தியாகும். இதனை அவர் இலவச ஈவாகத் தருகிறார். “இது தேவனுடைய ஈவு. ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியையினால் உண்டானதல்ல” (எபேசி.2:8-9).

விண்ணுலகத்திற்குச் செல்லத் தேவையான தகுதியைக் கிறிஸ்துவில் காண்கிறோம். ஒரு பாவியான மனிதன் மறுபடியும் பிறக்கிறபோது, கிறிஸ்துவை அடைகிறான். இனிமேல் மாம்சத்தில் பாவியான ஒருவனாக தேவன் அவனைப் பார்ப்பதில்லை. கிறிஸ்துவுக்குள்ளாகவே அவனைப் பார்க்கிறார். அதன் அடிப்படையில் அவனை ஏற்றுக்கொள்கிறார். நாம் அவருக்குள் தேவனடைய நீதியாகும்படிக்கும், பாவம் அறியாத கிறிஸ்துவை நமக்காக தேவன் பாவமாக்கினார் (2.கொரி.5:21).

இது என்ன முடிவிற்கு நம்மைக் கொண்டு வருகிறது? நாம் கிறிஸ்துவை உடையவராயிருக்கவேண்டும். இல்லையேல் அவரைப் பெறாதவர்களாக இருக்கவேண்டும். தேவனுடைய செயலின்படி, கிறிஸ்துவை நாம் பெற்றிருந்தால், விண்ணுலகிற்கு நாம் தகுதிபடைத்தவர்களாயிருக்கிறோம். கிறிஸ்துவினுடைய தகுதி நம்முடைய தகுதியாயிருக்கிறது. நாம் அவருக்குள் இருக்கும் காரணத்தினால், அவர் எவ்வளவு தகுதியுடையவராக இருக்கிறாரோ அவ்வளவு தகுதியுடையவர்களாக நாமும் இருக்கிறோம்.

கிறிஸ்து அற்றவர்களாக நாம் இருப்போமென்றால், பரலோகத்தை இழந்தவர்களாவோம். அவரின்றி நாம், ஏதொன்றினாலும் ஈடுசெய்ய இயலாதபடி மரணத்திற்கு ஏதுவான குறைவுடையவராயிருப்போம். ஆகவே, ஒரு விசுவாசியைக் காட்டிலும் மற்றொரு விசுவாசி விண்ணுலகம் செல்லக் கூடுதல் தகுதிபடைத்தவரல்லர். எல்லா விசுவாசிகளும் மகிமைக்குப் பாத்திரராக இருக்கின்றனர். கிறிஸ்துவே நமக்கு அந்தத் தகுதியாக இருக்கிறார். எந்த விசுவாசியும் கிறிஸ்துவைக் கூடுதலாகப் பெற்றிருப்பதில்லை. ஆகவே பரலோகம் செல்ல, ஒருவர் மற்றொருவரைக்காட்டிலும் தகுதி உடையவர் அல்லர்.