July

யூலை 7

யூலை 7

தேவனுக்கு முன்பாக…. செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன் (எஸ்.8:21).

எஸ்றாவுக்கு தேவனுடைய வழிநடத்துதல் அதிகமாய்த் தேவைப்பட்டது. ஏனெனில், அகாவா நதியை அடுத்த வனாந்தரத்தில் இரக்கமற்ற, அநீதியுள்ள, இரத்த வெறிபிடித்த கொள்ளையர் பலர் இருந்தனர். தேவன் தம்முடைய தெளிவான சித்தத்தை நமக்கு வெளிப்படுத்தும்போது, வாழ்க்கைப் பாதையில் அன்றாடம் சந்திக்கவேண்டிய காரியங்களைக் குறித்து மொத்தமாக எச்சரிப்பு கொடுக்கமாட்டார். ஆகவே நாமும் எஸ்றாவைப்போல் பயமின்றி, விசுவாசத்தோடு, நிதானமாக அன்றாடம் ஜெபித்து முன்னேறிச் செல்லவேண்டும்.

தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்று (எஸ்.8:22) நாமும் எஸ்றாவைப்போல் அறிந்துகொள்ளமுடியும். நாம் முழுவதுமாக அவருடைய சித்தத்திற்கே கீழ்ப்படிந்து நடக்கிறோம் என்பதை உணர்த்தும் ஆவியானவரின் நிச்சயத்தை நாம் உணரவேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் அமைதியுடன் நாம் ஆண்டவரின் முன்பு அமர்ந்திருப்போமாகில், நம் பயங்களைத் தவிர்த்து, தடைகளை தகர்த்து முன்னேறிச் செல்ல நம் படைத்தலைவர் பக்குவமாக உதவிசெய்வார்.

தேவன் வழிநடத்தும்படி அவரிடத்தில் நாம் கெஞ்சிக் கேட்கவேண்டிய அவசியமில்லை. இம்மட்டும் நம்மை வழிநடத்தின தேவன் இன்னமும் தாங்கி நடத்திடுவார் என்று விசுவாசித்தால் அதுவேபோதும். அவர் நமக்கு ஆலோசனை கூறி ஊக்கமளிக்க ஆயத்தமாயிருக்கிறார். அன்று அவர் எஸ்றாவிற்கும் அவனது ஜனங்களுக்கும் உண்மையாகவே உதவிசெய்ததுபோல், இன்றும் நம் ஜெபங்களைக் கேட்டு, தாழ்மையுள்ளவர்களுக்கும் தம்மைத் தேடுகிற யாவருக்கும் உதவி செய்கிறவருமாயிருக்கிறார்.