January

ஐனவரி 22

ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்ற வேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது (பிர.10:17).

தன்னலமின்மை, பிறருக்கு உதவுதல், பிறருக்கென விட்டுக்கொடுத்தல், தேவனுடைய இராஜ்யத்திற்கென உதவுதல் போன்றவற்றில் மெய்யான சந்தோஷத்தைக் கண்டுகொண்டோர் பலர். நல்ல வேலை, நல்ல முதலாளி, கைநிறைய சம்பளம், நிலையான உத்தியோகம் போன்றவை மகிழ்ச்சி தரும் என்போர் பலர். மனுக்குலத்தின் தோற்றம் முதற்கொண்டு இப்படிப்பட்ட இருதரப்பட்ட மக்களை நாம் கண்டு வருகிறோம். குழப்பமும், கொடுமையும் நிறைந்த இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இப்படிப்பட்ட இருவகையான தத்துவங்களைக் கொள்கையெனக் கொண்ட இருசாரார் உண்டு. அவர்கள் கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என்றால் மிகையாகாது. நம்மைப் படைத்த தேவன் உண்டு. அவரே நமது இரட்சகர் என்று விசுவாசிக்கும் வகுப்பார் கிறிஸ்தவர்கள். இவர்கள் தேவனால் படைக்கப்பட்ட மனிதனுடைய உயிர், உடமைகள், உரிமைகள் இவற்றை மதித்து, பிறருடைய மகிழ்ச்சிக்கென வாழ்பவர்கள். ஆனால் கம்யூனிஸ்டுகளோ தேவன் இல்லையென்ற நாத்திகக் கொள்ளைகளையும், பொருளை மையமாகக் கொண்ட கருத்துக்களையும் பரப்பி, மனிதனுடைய உரிமைகயையும், ஒற்றுமையையும், உண்மையின்மையையும் நாசமாக்கிக்கொண்டு வருகின்றனர்.

ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவனல்ல (லூக்.12.15) என்று இயேசு கிறி ஸ்து தாமே வலியுறுத்திக் கூறியுள்ளார். மனிதன் ஆகாரத்தினால் மட்டும் உயிர்வாழ்வதில்லை என்பதை வலியுறுத்தி மோசே, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் (உபா.8:3) எனக் கூறியுள்ளார். அதிகமான செல்வம் வைத்திருப்பவர்கள்தான் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என வேதம் கூறவில்லை. பலமுள்ளவனும், இரக்கமற்றவனும் சந்தோஷமாக இருக்க இயலாது. சாந்தகுணமுள்ளவர்கள்தான் சந்தோஷமாக இருக்கமுடியும். திருப்தியுடன் இருப்பவர்கள் அல்ல, சமாதானம் பண்ணுவோர்தான் பாக்கியமுள்ள வாழ்வை நடத்துவர்.

சந்தோஷம் தேவன் அருளும் ஈவு. எந்த மனிதனும் அதைக் கொடுப்பது கடினம்.