February

பெப்ரவரி 11

பெப்ரவரி 11

நீதியின்மேல்பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்கள் (மத்.5:6)

நம்முடைய ஆன்மீகப் பசியை நீக்குகிற அப்பமாகவும், தாகம் தீர்க்கிற தண்ணீராகவும் இயேசு கிறிஸ்து எவ்வாறு இருக்க முடியும்? மனிதன் பிழைக்கிறது அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வசனத்தினால்தான் என்பதை உணர்த்தவே தேவன் பசியைக் கொடுக்கிறார் என்று மோசே இஸ்ரவேலருக்குப் போதித்தான். எரேமியாவும் இதைப்பற்றி, உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன். உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும் என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருக்கிறது (எரேமி.15:16) எனக் கூறுகிறார். வேத வசனம் 1பேதுரு 2:1-2, எபி. 5:12-13ல் பாலாகவும் பலமான ஆகாரமாகவும் உருவகித்துக் கூறப்பட்டுள்ளது.

இயேசு கிறிஸ்து தமது கிருபையுள்ள ஆவியினால் நமக்கு ஜீவ தண்ணீராகவும் இருக்கிறார். அவர் யாக்கோபின் கிணற்றருகில் சமாரியப் பெண்ணைப் பார்த்து, இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் எனக் கூறினார்.

எருசலேம் தேவ ஆலயத்தில் இயேசு நின்று, சத்தமிட்டு, ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து பானம் பண்ணக்கடவன்…. என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத் தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்.

என்றுமே பசியடையாதிருக்க ஜீவ அப்பம் பெறும்படிக்கும், தாகமுடையாதபடிக்கு ஜீவ தண்ணீரையும் பெறும்படியும் தேவன் நம்மை வழிநடத்துவராக.